Tuesday 20 June 2017

மூன்றாம் உலகப் போர்

முதல் இரு உலகப் போர்களை பற்றி அறியாதோர் இருக்க இயலாது. நமக்கு தெரியவில்லை எனினும் அதை பற்றி சொல்லாத வரலாறே இல்லை என சொல்லலாம்... ஆனால் நமக்கே தெரியாமல் நாம் ஒவ்வொரு நாளும் போரிட்டு கொண்டிருக்கும் ஒரு சத்தமில்லா உலகப் போரை நாம் அறிய வாய்ப்பு இல்லை. அந்த உலகப் போரே ( உணவுப் போரே ) இக்கதையின் கரு.
கவிஞர் வைரமுத்து ஒரு கவிஞன் என்பதை தாண்டி ஒரு மண்ணின் மைந்தனாக தன் மனக்குமுறலை கொட்டுகிறார்.
ஒவ்வொரு நாகரிகமும் உருப்பெற்றது விவசாயத்தில் தான்.. எனில் நாகரிகத்தின் தோற்ற முகம் விவசாயம் தான். ஆனால் அந்த விவசாயமே நாகரிகமற்ற செயலாக பார்க்கும் அவலத்தை சாடுகிறார்.
வெறும் கட்டுரையாக பதிவு செய்யாமல், ஒரு கதையாக ( ஒரு விவசாயியின் வாழ்வாக ) உண்மையை பதிவு செய்வதில் தன் எழுத்துகளின் பண்பட்ட தன்மையை காட்டுகிறார்.
ஒவ்வொரு விவசாயிக்கும் மண் என்பது மற்றொரு தாய். அந்த மண்ணை காக்க, தன் வாழ்வை மீட்க, தன் வாரிசுகளின் வருங்காலம் காக்க,  தன் மானம் இழந்து தற்கொலை செய்து கொண்ட தன் தாத்தாவின் மானம் காக்க போராடும் ஒரு பேரனின் முயற்சியே இதன் முக்கிய அம்சம்.
ஒரு வருடத்திற்கு தோரயமாக 15,௦௦௦ விவசாயிகள் இந்தியாவில் தற்கொலை செய்து கொள்கிறார்கள். எனில் எதனால் இந்த விவசாயிகள் தற்கொலை எனும் கேள்விக்கும் இந்த நூலிலே விடை சொல்லும் பாங்கிலே கவிஞரின் எழுத்துக்கள் வியக்கத்தக்கவை.
இதற்கு ஆதிக்காரணம் மண்ணின் மனம் மறந்து, பணத்தின் போதைக்கு இலக்காகும் இளைஞர்களாகிய நாமே எனும் படிக்கும் வினாடியில் செய்யக்கூடாத தவறைச் செய்த குற்ற உணர்வைத் தருகிறார் கவிஞர்.
இக்கதையின் மற்றொரு சிறப்பு அம்சம் வெளிநாட்டு பயணிகளாக வரும் எமிலி, இஷிமுரா கதாப்பாத்திரங்கள். இவர்களின் இந்தியாவை குறித்த மேல்நாட்டு பார்வையில் இந்தியனின் அறியாமையும் இல்லை, இல்லை அறிந்தும் மற்றவர் பார்வைக்காக தன் இயல்பு முகத்தை மறைத்து வாழும் முட்டாள் தனத்தையும் கவிஞர் சுட்டுகிறார்.
கதையின் நாயகனாக வரும் வேளாண் மாணவனான சின்னப்பாண்டி தன் மண்ணின் மீதான காதலை வெளிப்படுத்த கல்வி அறிவும் தேவை என உணர்த்துவதில் வேளாண் கல்வியின் முக்கியத்துவம் புலப்படுகிறது. மேலை நாட்டு பாங்கோடு தன்னுடன் பழகும் எமிலியின் அழகை கண்டு அவளை காதல் கலந்த பார்வையோடு நோக்கும் இடங்கள் கதையின் இன்னொரு அத்தியாயம்.
புவிவெப்பமயமாதல், உணவுப்பஞ்சம், நீர் மேலாண்மை, விவசாய தற்கொலை என பலவற்றை பாமர மக்களும் படிக்கும் வகையில் பதிவு செய்ததில் கவிஞர் தன் தனித்தன்மையை காட்டியுள்ளார்.
     “ உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே
என்கிறார் திருமூலர்.
உயிர் கொடுத்தோர் தாய், தந்தை எனில் விவசாயிகளும் முகம் அறிய பெற்றோரே எனும் உணரும் உன்னத வேளையை எதிர்ப்பார்த்து நகருகிறது நூலின் இறுதி கட்டங்கள்....
கடைசியாக,
நூலை தொடங்கும் போது எதார்த்தமாக தொடங்கும் ஒவ்வொருவரும் அது
ஒரு  ( ஒவ்வொரு ) ஏழை விவசாயியின் ரத்த சரித்திரம் என்று அறிந்து புத்தகத்தை  மூடும் பொழுது கண்களில் நீர் சுரக்கும் என்பது உணர்வை தாண்டிய உண்மை.............



No comments:

Post a Comment

மதங்களைத் தாண்டி, மொழிகளைத் தாண்டி ஒலித்தது அந்த ஓலக்குரல் !

இன்றும் மறக்க இயலவில்லை ! அந்த கோர அலைகளின் கொடூரத்தை! இதோ சரசரவென்று பதினான்கு வருடங்கள் ஓடிவிட்டன. ஆனாலும் அந்த அலைகள் ஏற்படுத்திய வ...