Wednesday 26 December 2018

மதங்களைத் தாண்டி, மொழிகளைத் தாண்டி ஒலித்தது அந்த ஓலக்குரல் !


இன்றும் மறக்க இயலவில்லை! அந்த கோர அலைகளின் கொடூரத்தை! இதோ சரசரவென்று பதினான்கு வருடங்கள் ஓடிவிட்டன. ஆனாலும் அந்த அலைகள் ஏற்படுத்திய வடுக்கள் எண்ணங்களை விட்டு மறைந்த பாடில்லை. எதிர்பார்க்கா அலையாய் என் வாழ்வில் வந்து போனது அந்த சுனாமியின் கோர அலை.
2௦௦4 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் நாள் !
அதற்கு முந்தைய நாள் வரை சுனாமி என்னும் பெயரையோ ! இயற்கை சீற்றம் என்ன என்பதையோ நினைத்து கூடப் பார்க்கத் தெரியாத வயது ! இன்றும் நன்றாக நியாபகம் இருக்கிறது ! அன்று கிறிஸ்துமஸ் முடிந்த மறுநாள்!
வீட்டில் உள்ள எல்லோரும், எல்லோரும் என்றால் தாத்தா, பாட்டி, சித்தி, பெரியம்மா, அம்மா, அப்பா, அண்ணா, அக்கா என்று கிட்டத்தட்ட ஒரு பதினைந்து நபர்கள் இருப்போம். அப்போது நான் இரண்டாம் வகுப்பு படித்து கொண்டிருந்த வேளை. நான் அந்த கிறிஸ்துமஸ்காக கேரள மாநிலத்தவர்கள் அணியும் வெள்ளை நிறப் பட்டுப்பாவடையை ஆசையாக அணிந்து வலம் வந்து கொண்டிருந்தேன். புது உடை என்பதைத் தாண்டி அந்த உடையின் மீது எனக்கு அப்படி ஒரு ஈர்ப்பு. ஆசை ஆசையாய் வாங்கியிருந்தேன். ஆனால் அன்று தான் அந்த உடையை நான் முதலும் கடைசியுமாக உடுத்தியது.
ஆம்! சரியாக காலை ஒரு ஒன்பது மணி இருக்கும் ! வேளாங்கண்ணி கோவிலில் தங்கியிருந்த நாங்கள் அன்றைய நாளில் அங்கே சமைத்து, சாப்பிட்டு விட்டு வருவதாக உத்தேசித்து வீட்டிலிருந்து சமைப்பதற்கு தேவையான எல்லாமே கொண்டு சென்று இருந்தோம். ஆனால் அன்று சமைக்கவும் இல்லை ! சாப்பிடவும் இல்லை ! ஆம் அங்கு இருந்த ஆயிரக்கணக்கான உயிர்களை அந்த அலை அதற்குள் விழுங்கியிருந்தது.
காலை சாப்பாட்டை முடித்து விட்டு நானும் என் தம்பியும் விளையாட்டில் மூழ்கி இருந்தோம். ஓரமாக குவித்து வைக்கபட்டிருந்த மணலில் வீடு கட்டி விளையாடிக் கொண்டிருந்தோம். என் இரண்டு அண்ணன்களும் அவர்களுக்கு தெரிந்த கிரிக்கெட்டில் மூழ்கியிருந்தனர். என் அப்பாவும், பாட்டியும் அன்று சமைக்க தேவையான பொருள்களை வாங்க கடற்கரைக்கு கிளம்ப ஆயதமாயிருந்தனர்.
இதோ! எல்லோரும் கத்திக் கொண்டு ஓடிக்கொண்டிருக்கின்றனர். என்ன என்று யாருக்கும் புரியவில்லை. சொன்னால் புரிந்துகொள்ளும் வயதும் இல்லை. சொல்லி புரிய வைக்க யாருக்கும் நேரமும் இல்லை. அம்மா அப்பா என்று யாரையும் கூப்பிட முடியவில்லை. இதோ அலை நெருங்கி வருகிறது. ஐயோ! ஒரு தென்னை மர உயரத்துக்கு எழும்பி நின்ற அலையை முதலும், கடைசியுமாக கண்ட காட்சி இதோ இன்னமும் என்னால் மறக்க இயலவில்லை.
அந்நேரம் பார்த்து எனக்கு பூ வைக்க வந்த என்னுடைய சித்தி என் கைகளை பிடித்து இழுத்து கொண்டு ஓடுகிறார். என்னுடன் என் தம்பியும், வாய் பேச முடியா என் அண்ணனும்!
இன்னொரு அண்ணன் எங்கே?
தெரியவில்லை!
அம்மா அப்பா?
யாருமே எங்கே என்று தெரியவில்லை?
என்னுடன் வந்த பதினைந்து நபர்களில் இப்பொழுது வெறும் மூவர் மட்டுமே!
நாங்கள் ஓடி சென்று ஒரு லாட்ஜில் ஏறிக் கொண்டோம். எங்களை தொடர்ந்து தண்ணீரும் முதல் மாடி வரை வந்து விட்டது. இதோ நாங்கள் இரண்டாம் மாடிக்கு அவசர அவசரமாய் ஓடுகிறோம்.
எங்கும் ஒரே அழுகுரல் ! யாருக்கும் ஒன்றும் புரியவில்லை! 
மதங்களைத் தாண்டி, மொழிகளைத் தாண்டி ஒலித்தது அந்த ஓலக்குரல் ! 
எல்லாப் பக்கமும் தண்ணீர் சூழ்ந்துவிட்டது ! இனி நடப்பது நடக்கட்டும் அழுவதைத் தவிர வேறு வழியில்லை என்று புரிந்துவிட்டது. அம்மா அப்பா அண்ணன் என்று எல்லோரையும் தொலைத்து விட்டேன். இதோ தனியாய் நிற்கிறேன்! எனக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டு அருகில் சித்தி! இப்படியாக ஒரு அரை மணி நேரம் கழிந்தது! அந்த நொடி நினைக்கவில்லை என் அம்மாவையும் அப்பாவையும் மீண்டும் பார்ப்பேன் என்று!
வந்த அலை அமைதியாக கடல் திரும்பியிருந்தது. ஆனால் அது கொடுத்து சென்ற வலிகள்! அதை சொல்ல நிச்சயம் என்னிடம் வார்த்தை இல்லை!
எதிர்பாராவிதமாக எதிர் கட்டிடத்திலிருந்து வந்த என் அப்பா என்னைத் தூக்கி கொண்டு அழுகிறார். என் அப்பா அழுது பார்த்த முதல் நாள் அது ! என் அப்பாவைக் கட்டி கொண்டு என் அம்மாவை தேடுகிறேன். என்னை ஒருநாளும் பாப்பா என்று கூப்பிட்டு அறியாத அவன் பாப்பா என்று ஓடி வருகிறான்! அவனோடு என் அம்மாவும்! எங்கள் குடும்பத்தில் யாருக்கும் எதுவும் ஆகவில்லை!
ஆனால் எங்கு பார்த்தாலும் ஒரே சடலங்கள்! நிச்சயம் அத்தனை சடலங்களை ஒரே நாளில் பார்த்ததில்லை! இனி பார்க்கவும் விருப்பமில்லை! கோவிலின் கதவுகள் திறக்கப்பட அங்கே சென்று அடைக்கலம் புகுந்தோம். ஹெலிகாப்டரில் உணவுகள் கொடுத்தார்கள். ஆனால் அதை வாங்கி உண்ணும் அளவுக்கு யாருடைய மனதும் இடமளிக்கவில்லை. அத்தனை வலிகளை சுமந்து கொண்டு அகதிகளாய் நின்ற நாள் அது. ஆனால் வாழ்க்கையைக் குறித்த புதுவித வெறுமையை அந்த அலை சொல்லி சென்றது.
இதோ பொறுமையாய் நடையைத் துவங்கினோம். யாருக்கும் அலைபேசியில் தொடர்பு கொள்ள இணைப்புகளும் இல்லை. பயணத்தைத் தொடர வாகனங்களும் இல்லை. எல்லா அறிவியலும் தோற்றுப் போக பொடிநடையாக நடக்கத் துவங்கினோம். வரும் வழியெங்கும் பார்த்த உயிரற்ற சடலங்கள் இன்னும் மனத்தை விட்டு அகலவில்லை. உறவுகளோடு வந்து தனிமரமாய் எங்களுடன் நடந்தவர்கள் பலர். குழந்தையை இழந்து, மனைவியை இழந்து, கணவனை இழந்து, பெற்றோரை இழந்து சொந்த ஊர் நோக்கி புறப்பட்ட எங்களின் பயணம் வாழ்க்கையின் இன்னொரு முகத்தை இறுக்கமாய் காட்டி சென்றது. அன்றைய ஒரு நாள் வாழ்க்கையில் வராமல் போயிருந்தால் நன்றாக இருக்குமோ? இன்றும் தோன்றுகிறது.
இன்னும் வலிக்கிறது! ஆம் அங்கு எத்தனையோ உறவுகளைத் தொலைத்த உயிரின் மனம் படும் பாட்டை நினைக்க நினைக்க இன்னும் வலிக்கிறது.
அரசு வீடு கட்டி கொடுத்து இருக்கலாம்!
நிவாரணம் கொடுத்து இருக்கலாம்!
ஆனால் மாண்ட உயிரும், உறவும் இந்த மண்ணில் மீண்டும் திரும்ப வர போவதில்லையே?                 

                                                  

Wednesday 17 October 2018

என் அப்பாவின் முத்தம் !


என் வாழ்க்கையின்முதல்  கதாநாயகனாக என் அப்பாவுக்கு அவர் மகளின் கடிதம் ...
அப்பா எப்படி இருக்கிறீர்கள் ? அம்மா நிச்சயம் உங்களை நன்றாக தான் பார்த்துக் கொள்வார் .
ஆனால் எனக்கு தான் எப்பொழுதும் உங்களைப் பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது.
என் 20 வயது வரையிலான ஒவ்வொரு அத்தியாத்திலும் என் கூடவே இருந்தீர்கள்  .
நீங்கள் என்னைப் பற்றி எத்தகைய கனவு கண்டீர்கள்  என்று எனக்கு தெரியாது அப்பா ...
ஆனால் என் வாழ்வின் ஒவ்வொரு கனவிலும் உங்களின் கைப்பிடி இருந்தது .
அது சரியோ ? தவறோ ? என்று எனக்கு தெரியாது . ஆனால் அம்மா ஒவ்வொரு நாளும் என்னை ஒரு பெண்ணாக வளர்க்க படாதப்பாடு படும்  பொழுதெல்லாம்
 "அவள் கிடக்கிறாள் செல்லம் ...நீ  உனக்கு பிடித்ததைச் செய் " என்று சொல்லும் வார்த்தைகள் தான் எனக்கு வேதவாக்கு .
அம்மாவின் கைகள் என்னை அடிக்க ஓங்கியபோதும் உன் கரங்கள் தான் தடுத்து நிறுத்தின .அந்த கைகள் என்னை கட்டியணைத்தனவே தவிர ஒருபோதும் என்னை காயப்படுத்தியது இல்லை .
ஆனாலும் நான் உங்களுக்கு செய்த தொந்தரவு கொஞ்சம் நெஞ்சம் இல்ல ... இருந்த போதும் அதை உங்களால் ரசிக்க முடிந்ததே தவிர என்னை வெறுக்க முடியவில்லை .
ஒவ்வொரு தடவையும்  நான் கடைக்கு செல்லும் போதும் விலையைத் தேடித் தேடி பார்க்கும் என்னை செல்லமாகத் தட்டி
 "உனக்கு பிடித்ததை மட்டும் பார் ? விலையைப் பற்றி உனக்கு என்ன ? "
 என்று கூறும் நீங்கள் ஒரு நாளும் உங்களுக்கென்று எதுவும் வாங்கி கொண்டதில்லை .
உங்கள் கைக்கடிகாரம் உடைந்த போதும் அதையே சரி பண்ணி போட்டுக் கொண்ட நீங்கள் நான் கேட்டேன் என்று விலை உயர்ந்த கடிகாரம் வாங்கி கொடுத்தப் போதும் உங்கள் கைகளை நான் பார்க்கவில்லை ! பார்க்கவும் தோணவில்லை !
" எல்லோரும் பொண்ணை இப்படி செல்லமாக வளர்க்காதே !!! இன்னும் கொஞ்ச நாளில் இன்னொரு வீட்டுக்கு போகிறவள் "என்று சொல்லும்போதும் உங்கள் அரவணைப்பு என்னை விட்டு விலகவே இல்லை . சொல்லபோனால் அதிகமாய் தான் ஆகியது .
ஒவ்வொரு முறையும் என்னிடம் முத்தம் வாங்கிவிட்டு வேலைக்கு செல்லும் நீங்கள் வெளியூருக்கு போனாலும் அம்மாவிடம் கேட்கும் முதல் கேள்வி பாப்பா என்ன செய்கிறாள் என்பதே ...
என் அம்மா என்னை 10 மாதம் வயிற்றில் சுமந்தாலும் நீங்கள் தான் என்னை 20 வருடங்களாக தரையில் என் கால் படாமல் சுமக்கிறீர்கள் .
அம்மாவால் உங்களிடம் சாதிக்க முடியாத பல காரியங்கள் நான் கேட்டுவிட்டேன் என்ற காரணத்திற்காக அவசர அவசரமாக செய்து முடிப்பீர்கள் .
நான் சாப்பிட வேண்டும் அதுவும் ஒரு இளவரசி போல !!!என்பதே உங்களின் ஒரு நாளைய அதிகபட்ச ஆசையாக இருக்கும் .
ஆனாலும் எனக்கு ஒரு குறை அப்பா ...
அதுவரை என்னை தூக்கி கொஞ்சிய உங்கள் கைகள் நான் பருவம் அடைந்தேன் என்று தெரிந்த பிறகு  தூர இருந்தே கொஞ்ச ஆரம்பித்தன .
இப்பொழுதும் எனக்கு ஆசையாக இருக்கிறது அப்பா ...உங்கள் கூடவே இருந்து விடவேண்டும் என்று !!!
நீங்கள் என் கூட இருந்தவரை உங்களை எனக்கு புரியவில்லை .
என் திருமணமான நாளில் உங்களின் கண்களின் கண்ணீர் முதல்முறையாக என்னை ஏதோ செய்தது . இங்கு வந்த பிறகு ஒவ்வொரு நாளும் நான் செய்யும் தப்புகளை என் புக்ககம் திருத்திக் கொள்ள சொல்லும் போது உங்களின் நினைவு என் கண்களில் வந்து போகிறது.
என் தப்புகளை எல்லாம் என் அப்பா எப்படி சரியாக்கி என்னை தப்புவித்தார் என்று ?
அடுத்த ஜென்மத்தில் உங்களுக்கு ஒரு தாயாகி நீங்கள் செய்ததில் ஒரு பகுதியாவது செய்துவிட மாட்டேனா ? என்பதே என் அனுதின பிரார்த்தனை அப்பா !!!
மகளாகப் பிறந்தவளுக்கு தான் தெரியும் அப்பாவின் முத்தம் என் கணவனின் முத்தத்தை விட விலை உயர்ந்தது என்று !!!
இப்படிக்கு
உங்களின் இளவரசி .


மதங்களைத் தாண்டி, மொழிகளைத் தாண்டி ஒலித்தது அந்த ஓலக்குரல் !

இன்றும் மறக்க இயலவில்லை ! அந்த கோர அலைகளின் கொடூரத்தை! இதோ சரசரவென்று பதினான்கு வருடங்கள் ஓடிவிட்டன. ஆனாலும் அந்த அலைகள் ஏற்படுத்திய வ...