Wednesday 26 December 2018

மதங்களைத் தாண்டி, மொழிகளைத் தாண்டி ஒலித்தது அந்த ஓலக்குரல் !


இன்றும் மறக்க இயலவில்லை! அந்த கோர அலைகளின் கொடூரத்தை! இதோ சரசரவென்று பதினான்கு வருடங்கள் ஓடிவிட்டன. ஆனாலும் அந்த அலைகள் ஏற்படுத்திய வடுக்கள் எண்ணங்களை விட்டு மறைந்த பாடில்லை. எதிர்பார்க்கா அலையாய் என் வாழ்வில் வந்து போனது அந்த சுனாமியின் கோர அலை.
2௦௦4 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் நாள் !
அதற்கு முந்தைய நாள் வரை சுனாமி என்னும் பெயரையோ ! இயற்கை சீற்றம் என்ன என்பதையோ நினைத்து கூடப் பார்க்கத் தெரியாத வயது ! இன்றும் நன்றாக நியாபகம் இருக்கிறது ! அன்று கிறிஸ்துமஸ் முடிந்த மறுநாள்!
வீட்டில் உள்ள எல்லோரும், எல்லோரும் என்றால் தாத்தா, பாட்டி, சித்தி, பெரியம்மா, அம்மா, அப்பா, அண்ணா, அக்கா என்று கிட்டத்தட்ட ஒரு பதினைந்து நபர்கள் இருப்போம். அப்போது நான் இரண்டாம் வகுப்பு படித்து கொண்டிருந்த வேளை. நான் அந்த கிறிஸ்துமஸ்காக கேரள மாநிலத்தவர்கள் அணியும் வெள்ளை நிறப் பட்டுப்பாவடையை ஆசையாக அணிந்து வலம் வந்து கொண்டிருந்தேன். புது உடை என்பதைத் தாண்டி அந்த உடையின் மீது எனக்கு அப்படி ஒரு ஈர்ப்பு. ஆசை ஆசையாய் வாங்கியிருந்தேன். ஆனால் அன்று தான் அந்த உடையை நான் முதலும் கடைசியுமாக உடுத்தியது.
ஆம்! சரியாக காலை ஒரு ஒன்பது மணி இருக்கும் ! வேளாங்கண்ணி கோவிலில் தங்கியிருந்த நாங்கள் அன்றைய நாளில் அங்கே சமைத்து, சாப்பிட்டு விட்டு வருவதாக உத்தேசித்து வீட்டிலிருந்து சமைப்பதற்கு தேவையான எல்லாமே கொண்டு சென்று இருந்தோம். ஆனால் அன்று சமைக்கவும் இல்லை ! சாப்பிடவும் இல்லை ! ஆம் அங்கு இருந்த ஆயிரக்கணக்கான உயிர்களை அந்த அலை அதற்குள் விழுங்கியிருந்தது.
காலை சாப்பாட்டை முடித்து விட்டு நானும் என் தம்பியும் விளையாட்டில் மூழ்கி இருந்தோம். ஓரமாக குவித்து வைக்கபட்டிருந்த மணலில் வீடு கட்டி விளையாடிக் கொண்டிருந்தோம். என் இரண்டு அண்ணன்களும் அவர்களுக்கு தெரிந்த கிரிக்கெட்டில் மூழ்கியிருந்தனர். என் அப்பாவும், பாட்டியும் அன்று சமைக்க தேவையான பொருள்களை வாங்க கடற்கரைக்கு கிளம்ப ஆயதமாயிருந்தனர்.
இதோ! எல்லோரும் கத்திக் கொண்டு ஓடிக்கொண்டிருக்கின்றனர். என்ன என்று யாருக்கும் புரியவில்லை. சொன்னால் புரிந்துகொள்ளும் வயதும் இல்லை. சொல்லி புரிய வைக்க யாருக்கும் நேரமும் இல்லை. அம்மா அப்பா என்று யாரையும் கூப்பிட முடியவில்லை. இதோ அலை நெருங்கி வருகிறது. ஐயோ! ஒரு தென்னை மர உயரத்துக்கு எழும்பி நின்ற அலையை முதலும், கடைசியுமாக கண்ட காட்சி இதோ இன்னமும் என்னால் மறக்க இயலவில்லை.
அந்நேரம் பார்த்து எனக்கு பூ வைக்க வந்த என்னுடைய சித்தி என் கைகளை பிடித்து இழுத்து கொண்டு ஓடுகிறார். என்னுடன் என் தம்பியும், வாய் பேச முடியா என் அண்ணனும்!
இன்னொரு அண்ணன் எங்கே?
தெரியவில்லை!
அம்மா அப்பா?
யாருமே எங்கே என்று தெரியவில்லை?
என்னுடன் வந்த பதினைந்து நபர்களில் இப்பொழுது வெறும் மூவர் மட்டுமே!
நாங்கள் ஓடி சென்று ஒரு லாட்ஜில் ஏறிக் கொண்டோம். எங்களை தொடர்ந்து தண்ணீரும் முதல் மாடி வரை வந்து விட்டது. இதோ நாங்கள் இரண்டாம் மாடிக்கு அவசர அவசரமாய் ஓடுகிறோம்.
எங்கும் ஒரே அழுகுரல் ! யாருக்கும் ஒன்றும் புரியவில்லை! 
மதங்களைத் தாண்டி, மொழிகளைத் தாண்டி ஒலித்தது அந்த ஓலக்குரல் ! 
எல்லாப் பக்கமும் தண்ணீர் சூழ்ந்துவிட்டது ! இனி நடப்பது நடக்கட்டும் அழுவதைத் தவிர வேறு வழியில்லை என்று புரிந்துவிட்டது. அம்மா அப்பா அண்ணன் என்று எல்லோரையும் தொலைத்து விட்டேன். இதோ தனியாய் நிற்கிறேன்! எனக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டு அருகில் சித்தி! இப்படியாக ஒரு அரை மணி நேரம் கழிந்தது! அந்த நொடி நினைக்கவில்லை என் அம்மாவையும் அப்பாவையும் மீண்டும் பார்ப்பேன் என்று!
வந்த அலை அமைதியாக கடல் திரும்பியிருந்தது. ஆனால் அது கொடுத்து சென்ற வலிகள்! அதை சொல்ல நிச்சயம் என்னிடம் வார்த்தை இல்லை!
எதிர்பாராவிதமாக எதிர் கட்டிடத்திலிருந்து வந்த என் அப்பா என்னைத் தூக்கி கொண்டு அழுகிறார். என் அப்பா அழுது பார்த்த முதல் நாள் அது ! என் அப்பாவைக் கட்டி கொண்டு என் அம்மாவை தேடுகிறேன். என்னை ஒருநாளும் பாப்பா என்று கூப்பிட்டு அறியாத அவன் பாப்பா என்று ஓடி வருகிறான்! அவனோடு என் அம்மாவும்! எங்கள் குடும்பத்தில் யாருக்கும் எதுவும் ஆகவில்லை!
ஆனால் எங்கு பார்த்தாலும் ஒரே சடலங்கள்! நிச்சயம் அத்தனை சடலங்களை ஒரே நாளில் பார்த்ததில்லை! இனி பார்க்கவும் விருப்பமில்லை! கோவிலின் கதவுகள் திறக்கப்பட அங்கே சென்று அடைக்கலம் புகுந்தோம். ஹெலிகாப்டரில் உணவுகள் கொடுத்தார்கள். ஆனால் அதை வாங்கி உண்ணும் அளவுக்கு யாருடைய மனதும் இடமளிக்கவில்லை. அத்தனை வலிகளை சுமந்து கொண்டு அகதிகளாய் நின்ற நாள் அது. ஆனால் வாழ்க்கையைக் குறித்த புதுவித வெறுமையை அந்த அலை சொல்லி சென்றது.
இதோ பொறுமையாய் நடையைத் துவங்கினோம். யாருக்கும் அலைபேசியில் தொடர்பு கொள்ள இணைப்புகளும் இல்லை. பயணத்தைத் தொடர வாகனங்களும் இல்லை. எல்லா அறிவியலும் தோற்றுப் போக பொடிநடையாக நடக்கத் துவங்கினோம். வரும் வழியெங்கும் பார்த்த உயிரற்ற சடலங்கள் இன்னும் மனத்தை விட்டு அகலவில்லை. உறவுகளோடு வந்து தனிமரமாய் எங்களுடன் நடந்தவர்கள் பலர். குழந்தையை இழந்து, மனைவியை இழந்து, கணவனை இழந்து, பெற்றோரை இழந்து சொந்த ஊர் நோக்கி புறப்பட்ட எங்களின் பயணம் வாழ்க்கையின் இன்னொரு முகத்தை இறுக்கமாய் காட்டி சென்றது. அன்றைய ஒரு நாள் வாழ்க்கையில் வராமல் போயிருந்தால் நன்றாக இருக்குமோ? இன்றும் தோன்றுகிறது.
இன்னும் வலிக்கிறது! ஆம் அங்கு எத்தனையோ உறவுகளைத் தொலைத்த உயிரின் மனம் படும் பாட்டை நினைக்க நினைக்க இன்னும் வலிக்கிறது.
அரசு வீடு கட்டி கொடுத்து இருக்கலாம்!
நிவாரணம் கொடுத்து இருக்கலாம்!
ஆனால் மாண்ட உயிரும், உறவும் இந்த மண்ணில் மீண்டும் திரும்ப வர போவதில்லையே?                 

                                                  

Wednesday 17 October 2018

என் அப்பாவின் முத்தம் !


என் வாழ்க்கையின்முதல்  கதாநாயகனாக என் அப்பாவுக்கு அவர் மகளின் கடிதம் ...
அப்பா எப்படி இருக்கிறீர்கள் ? அம்மா நிச்சயம் உங்களை நன்றாக தான் பார்த்துக் கொள்வார் .
ஆனால் எனக்கு தான் எப்பொழுதும் உங்களைப் பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது.
என் 20 வயது வரையிலான ஒவ்வொரு அத்தியாத்திலும் என் கூடவே இருந்தீர்கள்  .
நீங்கள் என்னைப் பற்றி எத்தகைய கனவு கண்டீர்கள்  என்று எனக்கு தெரியாது அப்பா ...
ஆனால் என் வாழ்வின் ஒவ்வொரு கனவிலும் உங்களின் கைப்பிடி இருந்தது .
அது சரியோ ? தவறோ ? என்று எனக்கு தெரியாது . ஆனால் அம்மா ஒவ்வொரு நாளும் என்னை ஒரு பெண்ணாக வளர்க்க படாதப்பாடு படும்  பொழுதெல்லாம்
 "அவள் கிடக்கிறாள் செல்லம் ...நீ  உனக்கு பிடித்ததைச் செய் " என்று சொல்லும் வார்த்தைகள் தான் எனக்கு வேதவாக்கு .
அம்மாவின் கைகள் என்னை அடிக்க ஓங்கியபோதும் உன் கரங்கள் தான் தடுத்து நிறுத்தின .அந்த கைகள் என்னை கட்டியணைத்தனவே தவிர ஒருபோதும் என்னை காயப்படுத்தியது இல்லை .
ஆனாலும் நான் உங்களுக்கு செய்த தொந்தரவு கொஞ்சம் நெஞ்சம் இல்ல ... இருந்த போதும் அதை உங்களால் ரசிக்க முடிந்ததே தவிர என்னை வெறுக்க முடியவில்லை .
ஒவ்வொரு தடவையும்  நான் கடைக்கு செல்லும் போதும் விலையைத் தேடித் தேடி பார்க்கும் என்னை செல்லமாகத் தட்டி
 "உனக்கு பிடித்ததை மட்டும் பார் ? விலையைப் பற்றி உனக்கு என்ன ? "
 என்று கூறும் நீங்கள் ஒரு நாளும் உங்களுக்கென்று எதுவும் வாங்கி கொண்டதில்லை .
உங்கள் கைக்கடிகாரம் உடைந்த போதும் அதையே சரி பண்ணி போட்டுக் கொண்ட நீங்கள் நான் கேட்டேன் என்று விலை உயர்ந்த கடிகாரம் வாங்கி கொடுத்தப் போதும் உங்கள் கைகளை நான் பார்க்கவில்லை ! பார்க்கவும் தோணவில்லை !
" எல்லோரும் பொண்ணை இப்படி செல்லமாக வளர்க்காதே !!! இன்னும் கொஞ்ச நாளில் இன்னொரு வீட்டுக்கு போகிறவள் "என்று சொல்லும்போதும் உங்கள் அரவணைப்பு என்னை விட்டு விலகவே இல்லை . சொல்லபோனால் அதிகமாய் தான் ஆகியது .
ஒவ்வொரு முறையும் என்னிடம் முத்தம் வாங்கிவிட்டு வேலைக்கு செல்லும் நீங்கள் வெளியூருக்கு போனாலும் அம்மாவிடம் கேட்கும் முதல் கேள்வி பாப்பா என்ன செய்கிறாள் என்பதே ...
என் அம்மா என்னை 10 மாதம் வயிற்றில் சுமந்தாலும் நீங்கள் தான் என்னை 20 வருடங்களாக தரையில் என் கால் படாமல் சுமக்கிறீர்கள் .
அம்மாவால் உங்களிடம் சாதிக்க முடியாத பல காரியங்கள் நான் கேட்டுவிட்டேன் என்ற காரணத்திற்காக அவசர அவசரமாக செய்து முடிப்பீர்கள் .
நான் சாப்பிட வேண்டும் அதுவும் ஒரு இளவரசி போல !!!என்பதே உங்களின் ஒரு நாளைய அதிகபட்ச ஆசையாக இருக்கும் .
ஆனாலும் எனக்கு ஒரு குறை அப்பா ...
அதுவரை என்னை தூக்கி கொஞ்சிய உங்கள் கைகள் நான் பருவம் அடைந்தேன் என்று தெரிந்த பிறகு  தூர இருந்தே கொஞ்ச ஆரம்பித்தன .
இப்பொழுதும் எனக்கு ஆசையாக இருக்கிறது அப்பா ...உங்கள் கூடவே இருந்து விடவேண்டும் என்று !!!
நீங்கள் என் கூட இருந்தவரை உங்களை எனக்கு புரியவில்லை .
என் திருமணமான நாளில் உங்களின் கண்களின் கண்ணீர் முதல்முறையாக என்னை ஏதோ செய்தது . இங்கு வந்த பிறகு ஒவ்வொரு நாளும் நான் செய்யும் தப்புகளை என் புக்ககம் திருத்திக் கொள்ள சொல்லும் போது உங்களின் நினைவு என் கண்களில் வந்து போகிறது.
என் தப்புகளை எல்லாம் என் அப்பா எப்படி சரியாக்கி என்னை தப்புவித்தார் என்று ?
அடுத்த ஜென்மத்தில் உங்களுக்கு ஒரு தாயாகி நீங்கள் செய்ததில் ஒரு பகுதியாவது செய்துவிட மாட்டேனா ? என்பதே என் அனுதின பிரார்த்தனை அப்பா !!!
மகளாகப் பிறந்தவளுக்கு தான் தெரியும் அப்பாவின் முத்தம் என் கணவனின் முத்தத்தை விட விலை உயர்ந்தது என்று !!!
இப்படிக்கு
உங்களின் இளவரசி .


Tuesday 20 June 2017

மூன்றாம் உலகப் போர்

முதல் இரு உலகப் போர்களை பற்றி அறியாதோர் இருக்க இயலாது. நமக்கு தெரியவில்லை எனினும் அதை பற்றி சொல்லாத வரலாறே இல்லை என சொல்லலாம்... ஆனால் நமக்கே தெரியாமல் நாம் ஒவ்வொரு நாளும் போரிட்டு கொண்டிருக்கும் ஒரு சத்தமில்லா உலகப் போரை நாம் அறிய வாய்ப்பு இல்லை. அந்த உலகப் போரே ( உணவுப் போரே ) இக்கதையின் கரு.
கவிஞர் வைரமுத்து ஒரு கவிஞன் என்பதை தாண்டி ஒரு மண்ணின் மைந்தனாக தன் மனக்குமுறலை கொட்டுகிறார்.
ஒவ்வொரு நாகரிகமும் உருப்பெற்றது விவசாயத்தில் தான்.. எனில் நாகரிகத்தின் தோற்ற முகம் விவசாயம் தான். ஆனால் அந்த விவசாயமே நாகரிகமற்ற செயலாக பார்க்கும் அவலத்தை சாடுகிறார்.
வெறும் கட்டுரையாக பதிவு செய்யாமல், ஒரு கதையாக ( ஒரு விவசாயியின் வாழ்வாக ) உண்மையை பதிவு செய்வதில் தன் எழுத்துகளின் பண்பட்ட தன்மையை காட்டுகிறார்.
ஒவ்வொரு விவசாயிக்கும் மண் என்பது மற்றொரு தாய். அந்த மண்ணை காக்க, தன் வாழ்வை மீட்க, தன் வாரிசுகளின் வருங்காலம் காக்க,  தன் மானம் இழந்து தற்கொலை செய்து கொண்ட தன் தாத்தாவின் மானம் காக்க போராடும் ஒரு பேரனின் முயற்சியே இதன் முக்கிய அம்சம்.
ஒரு வருடத்திற்கு தோரயமாக 15,௦௦௦ விவசாயிகள் இந்தியாவில் தற்கொலை செய்து கொள்கிறார்கள். எனில் எதனால் இந்த விவசாயிகள் தற்கொலை எனும் கேள்விக்கும் இந்த நூலிலே விடை சொல்லும் பாங்கிலே கவிஞரின் எழுத்துக்கள் வியக்கத்தக்கவை.
இதற்கு ஆதிக்காரணம் மண்ணின் மனம் மறந்து, பணத்தின் போதைக்கு இலக்காகும் இளைஞர்களாகிய நாமே எனும் படிக்கும் வினாடியில் செய்யக்கூடாத தவறைச் செய்த குற்ற உணர்வைத் தருகிறார் கவிஞர்.
இக்கதையின் மற்றொரு சிறப்பு அம்சம் வெளிநாட்டு பயணிகளாக வரும் எமிலி, இஷிமுரா கதாப்பாத்திரங்கள். இவர்களின் இந்தியாவை குறித்த மேல்நாட்டு பார்வையில் இந்தியனின் அறியாமையும் இல்லை, இல்லை அறிந்தும் மற்றவர் பார்வைக்காக தன் இயல்பு முகத்தை மறைத்து வாழும் முட்டாள் தனத்தையும் கவிஞர் சுட்டுகிறார்.
கதையின் நாயகனாக வரும் வேளாண் மாணவனான சின்னப்பாண்டி தன் மண்ணின் மீதான காதலை வெளிப்படுத்த கல்வி அறிவும் தேவை என உணர்த்துவதில் வேளாண் கல்வியின் முக்கியத்துவம் புலப்படுகிறது. மேலை நாட்டு பாங்கோடு தன்னுடன் பழகும் எமிலியின் அழகை கண்டு அவளை காதல் கலந்த பார்வையோடு நோக்கும் இடங்கள் கதையின் இன்னொரு அத்தியாயம்.
புவிவெப்பமயமாதல், உணவுப்பஞ்சம், நீர் மேலாண்மை, விவசாய தற்கொலை என பலவற்றை பாமர மக்களும் படிக்கும் வகையில் பதிவு செய்ததில் கவிஞர் தன் தனித்தன்மையை காட்டியுள்ளார்.
     “ உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே
என்கிறார் திருமூலர்.
உயிர் கொடுத்தோர் தாய், தந்தை எனில் விவசாயிகளும் முகம் அறிய பெற்றோரே எனும் உணரும் உன்னத வேளையை எதிர்ப்பார்த்து நகருகிறது நூலின் இறுதி கட்டங்கள்....
கடைசியாக,
நூலை தொடங்கும் போது எதார்த்தமாக தொடங்கும் ஒவ்வொருவரும் அது
ஒரு  ( ஒவ்வொரு ) ஏழை விவசாயியின் ரத்த சரித்திரம் என்று அறிந்து புத்தகத்தை  மூடும் பொழுது கண்களில் நீர் சுரக்கும் என்பது உணர்வை தாண்டிய உண்மை.............



இனியொரு யுகம் செய்வோம்

 இன்றைய காலக்கட்டத்தில் ஒரு நாளை நல்ல படியாக முடிப்பதுற்குள் போதும் போதும் என்றாகி போகிறது . இன்றைக்கு யார் என்ன குண்டை தூக்கி போட போகிறார்களோ ? என்ன மாற்றம் வர போகிறதோ ? என்ற ஒரு பரபரப்புடனே வாழ வேண்டிய நிர்பந்தம் உருவாகி உள்ளது .
இன்றைய அரசாங்கமும் , கால சூழ்நிலையும் நம்மை ஒரு பதட்டத்துடனே வைத்துள்ளது . அன்றாட நிலவரம் காண நியூஸ் சேனல்கள் பார்த்த நிலை மாறி அன்றாடம் யார் ஆட்சி நடக்கிறது என அறிய நியூஸ் சேனல்கள் பார்க்கும் நிலை ஏற்ப்பட்டுள்ளது .
ஒரு பக்கம் விவசாயிகள் போராட்டம் , மறு பக்கம் ஒரு நாடு!!! ஒரு வரி!!! பிரச்சனை .
ஒரு பக்கம் பிளாஸ்டிக் அரிசி , மறுபக்கம் பதஞ்சலியின் இயற்கை அரிசி .
ஒரு பக்கம் ஆட்சியை தக்க வைக்கும் போராட்டம் , மறுபக்கம் வாழ்க்கையை மீட்டுக்கொள்ளும் ஏழ்மை அவலம்.
ஒரு பக்கம் கங்கையை மீட்டு எடுக்க கோடிக்கணக்கில் நிதி , மறுபக்கம் காவிரி நீரை காண விரும்பி பனித்துப் போன கண்கள் .
ஒரு பக்கம் வல்லரசு பெற போராட்டம் , மறு பக்கம் இறையாண்மையை மதத்தின் பேரில் கூற போட்ட கேவலம் .
ஒரு முரண்பட்ட சமுகத்தில் நாம் நிதம் நிதம் வாழ்வை கழிக்கும் தலையெழுத்து .
200 ஆண்டுகளுக்கு முன்னர் அறியாமையால் அடிமையை மகுடமாக்கினோம் . இன்று எல்லாம் அறிந்தும் சுயலாபத்துக்காக அறியாமையை மகுடமாக்க துணிந்து உள்ளோம்.
மக்கள் நலம் காக்கும் கரங்கள் தன் பதவி காக்கும் போராட்டத்தில் தன் பதவிக்கான அடையாளம் தொலைத்து நிற்கின்றன .
சமிபத்தில் நான் பார்த்த விஷயம் என்னை யோசிக்க வைத்தன .
மாலை 5 மணி இருக்கும் .
நான் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தேன் . பேருந்து கூட்ட நெரிசலில் நின்று கொண்டிருந்தது . அப்பொழுது தான் அந்த காட்சி என் கண்ணில் பட்டது .
அது ஒரு நடை பாதை . அங்கு 3 குழந்தைகள் . 3 பெண்கள் அமர்ந்து இருந்தனர் . அந்த குழந்தையில் ஒருவனுக்கு 6 வயது இருக்கும் . மீதி குழந்தை இரண்டுக்கும் 2-3 வயது இருக்கும் . அந்த 6 வயது பையன் ஒரு பிளாஸ்டிக் கவரில் டீ வாங்கி வருகிறான் கூடவே இரண்டு டீ கப் .அதை வாங்கிய அந்த பெண்மணி இரண்டு கப்பில் டீயை ஊற்றி ஒன்றை அந்த 6 வயது பையனுக்கும் , மற்ற ஒன்றை தன் அம்மா வயதில் இருக்கும் ஒரு பெண்ணுக்கும் கொடுத்து , அவர்கள் குடித்த பிறகு அந்த கப்பை கொண்டே மீதம் இருந்த டீயை எடுத்து ஒரு பாதியை அந்த பெண் குடிக்க , மறுபாதியை அந்த பெண் குடிக்கும் சமயத்தில் உறங்கி கொண்டிருந்த ஒரு குழந்தை விழித்து அதை கேட்க அந்த டீயும் கால்வாசி அவளுக்கும் , மீதம் அந்த குழந்தைக்குமாக பகிரப்பட்டது . இன்னும் கொடுமையான நிகழ்வு அந்த குழந்தை இரண்டும் உறங்கிய இடம் , டீ கடைக்கு அருகில் என்பதால் ஈக்களுக்கும் குறைவில்லை ,அவை அந்த குழந்தையை சுவை பார்க்கவும் தவறவில்லை . அதை கண்ட தாய் , அதை விட ஒரு அழுக்கு துணி உண்டா என்று என்னால் விளங்க முடியாத ஒன்றை கொண்டு அதன் முகம் மூடினாள் தன் தாய்மையின் துடிப்பினால் ...    
இந்த நிகழ்வை என்னால் அவ்வளவு எளிதாக கடந்து போக முடியவில்லை . ஏனெனில் சமிபத்தில் என் நண்பனின் அக்காவிற்கு பிரசவத்திற்கு 7௦௦௦௦ கட்டி மகப்பேறு செய்து இருக்கிறார்கள் . எங்கள் வீட்டில் குழந்தை பேற்றை விட , அதற்கு பேர் வைக்கும் நிகழ்விற்கு ஒரு கணிசமான தொகை செலவிடப்படும்.
இப்படி ஒரு கூட்டம் நம்மிடையே இருக்க ,
ஒரு வாழ்வின் மிக குறைந்தபட்ச தேவையான உணவு , உடை , உறைவிடம் இவையே இல்லாமல் போராடும் ஒரு கூட்டம்.
இப்படி மாறுபட்ட சமுகத்தில் நாம் இருந்து கொண்டு என்னால் எப்படி பட்ட வளர்ச்சியை இந்தியா காணும் என எண்ண என் மனம் துணிய மறுக்கிறது .
“நம் நாட்டின் பொருளாதாரம் பெருக அயல் நாட்டுடன் செய்யப்படும் ஒப்பந்தகளையும்  , 103 செயற்கை கோள்களையும்  தாண்டி இந்த சமுகம் இன்னமும் எதையோ ஒன்றை இழந்து தவிப்பதை நாம் ஒத்துகொள்ள தான் வேண்டும் “
இன்றைய அனைத்து கொள்கைகளும் பணக்காரனை இன்னும் பணக்காரனாக ஏழையை இன்னும் ஏழையாக மாற்றுகிறது .
“அரைவயிற்று கஞ்சிக்கு ஒரு சிலர் அல்லாட , உணவு பிடிக்கவில்லை என ஒதுக்கும் நிலையில் தானே நாம் உள்ளோம். விமானத்தில் ஒருவன் பயணிக்க மற்றொருவன் வாழ்வின் லட்சியமே விமானத்தை ஒரு முறையாவது நேரில் பார்க்க வேண்டும் என்றுள்ளது “
இது புறம் இருக்க இந்த 6 மாதமாக இன்றைய அரசியல் கட்சிகள் மக்களுக்கு என்று என்ன செய்தது என்ற கேள்வியை என்னிலிருந்து என்னால் அகற்ற முடியவில்லை . சமுக பிரச்சனைகளை அரசியலாக்கி , அரசியலை மறந்து போன எதிர்கட்சிகள் . மக்களாட்சியை மறந்து போன மக்கள் .
கதிரமங்கலத்தில் ஒரு கூட்டம் சொந்த ஊரிலே அகதியாக நிலை மாற அழுது கொண்டு இருக்கிறது . எனக்கு மீத்தேன் வேண்டாம் என்ற முழங்கிய மக்கள் கூட்டம் இன்று ஹைட்ரோ கார்போனை தவிர்க்க முடியாமல் வேதனையோடு விதியை நொந்து கொள்கிறது . மது கடைகளை மூட விதித்த உத்தரவுகள் எப்பொழுது அவை இடம் மாற்ற செய்யப்பட வேண்டிய உத்தரவாக மாறியது என்று எனக்கு புரியவில்லை . அரிசியையும் , மாட்டையும் கொண்டு அரசியல் செய்யும் மத்திய அரசு . அதன் உண்மை அறியாமல் மனம் புழுங்கும் சாமானிய மனம்.
பணம் விநியோகித்தல் காரணமாக  தள்ளிவைக்கப் பட்ட தேர்தல்கள் ! ஆனால் பணம் கொடுத்தவர்கள் என்னவோ ஆட்சி பீடத்தை அலங்கரிக்க தவறவில்லையே .! இது தேர்தல் ஆணையம் அறியாததோ ?????
யார் நம்மை ஆட்சி செய்கிறார்கள் என்று தெரியவில்லை ? ஜனநாயகம் புரியவில்லை ? வல்லரசின் அர்த்தம் விளங்வில்லை ? பதவியையும் , பணத்தையும் பிரதானமாக கொண்ட இடங்களில் இதையெல்லாம் எதிர்பார்ப்பது என் முட்டாள் தனமோ ?
மேற்கூறியவை எல்லாம்  நாம் அறியாதவை அல்ல !!! நாம் அறிந்தும் அறியாதது போன்று கடந்து போக துணிந்த நிகழ்வுகள் !!!
இந்நிலை மாற வேண்டும் ....
அந்த மாற்றமாக நாம் இருக்க வேண்டும் ....
உன் சமுகத்தில் நீ எதையும் பெரிதாக செய்ய வேண்டாம்  ...
உன் அறியாமை திரையை முதலில் நீ அகற்று ...
இந்த சமுகத்தில் நீ யார் ? நீ இந்த சமுகத்துக்கு என்ன செய்ய வேண்டும் என்று யோசி ?
உனக்கே புரியும் ..........
இந்த சமுகம் உன்னையும் , என்னையும் எதிர்பார்த்து நிற்கிறது !!!
அந்த மகான் வருங்கால இந்தியா இளைஞர்கள் கையில் என்று சொன்னதை பசுமரத்தாணி போன்று நெஞ்சில் பதித்து கொண்டு !!!

சிகரத்தை தொட....3

துண்டு துண்டாக கிடந்த தன் மகளின் உடல் கண்டு கதறியது பாமர மலைவாசி தம்பதி..
ஐயோ உன்ன இதுக்கா புள்ள இவ்ளோ தூரம் அனுப்பி படிக்க வச்சோம் .. ஆம்பிள புள்ளைய கூட நம்பலையே ... உன்ன சின்ராசுக்கு கட்டி கொடுத்து உன் கூட கடைசி மூச்ச விடலாம்னு நினச்சா .. எங்களுக்கு முன்னாடி நீ மூச்ச விட்டுட்டியே ...
பொன பொட்டலத்தின் முன் கதறியது அந்த தம்பதி...
அழாதிங்க ! என் பேரு சிவராமன் .. கலெக்டர் சார்  என்ன case incharge ஆ நியமிச்சு இருக்காரு...உங்க பொண்ணு சாவுல உள்ள மர்மத்தை கண்டுபிடிக்காம விடமாட்டேன்...
உங்க பொண்ணு உடம்புல நிறைய இடத்துல காயம் இருக்குனு ரிப்போர்ட் வந்து இருக்கு ..அது மட்டும் இல்லாம அவ உடம்புல உள்ள ரேகையும் பதிவு செஞ்சு இருக்கோம் பாப்போம் ..
ரகு சுகந்தியுடன் ஒன்றாக படிக்கும் பெரிய இடத்து பையன். ஆள் பெரிய இடம் என்பதால் முகமும் அதனை அழகாக பரைசாற்றியது. அவன் அப்பா high court வக்கீல் . சென்னையை பூர்வீகமாக கொண்ட குடும்பம் . வீட்டிற்க்கு ஒரே செல்ல வாரிசு என்பதால் செல்லம் அதிகம் ..பிடிவாதமும் கூட...
இவன் தான் மீனுவிர்க்கு friend request அந்த பையன் . மீனுவை பற்றி சொல்லவே இல்லையே ?
மீனு நடுத்தர வர்கத்தை சார்ந்த பெண். சுகந்தி அளவிற்கு அழகானவள் இல்லை என்றாலும் பெண்ணின் இயல்பான ஆழகு உடையவள் . facebook ல் தொடங்கிய இவர்களின் நட்பு நாளடைவில் phone no பரிமாறும் அளவிற்கு முன்னேறியது..
அது நாளடைவில் காதலாக கனிந்திருக்கும் என்பதில் ஐயமில்லை ..
இந்த பொண்ணு உடம்புல உள்ள கைரேகைய வச்சு பார்த்தா 18லேந்து 25 வுயசுள்ள யாரோ ஒருத்தன் தான் கொன்னு இருக்கணும் நு தெரிது ..ஆனா இந்த பொண்ணு பசங்க கூடவே பேசாது நு சுத்தி உள்ள எல்லா பொண்ணுங்களும் சொல்லுதுங்க அது மட்டும் இல்லாம இந்த பொண்ணுக்கு அதோட மாமா பையன பொறந்தப்பே பேசி முடிசுட்டோம்னு அவங்க அம்மா அப்பா சொல்றாங்க ..அவ friends எல்லாருமே அவ அவங்க மாமா பையன love பண்ணதா தான் சொல்றாங்க ...அப்போ காதல் விவகாரமாவும் இருக்காது ..புரில்லயே....ஆனா இதுக்கு பின்னாடி ஏதோ சதி இருக்குது ,...அத தெரியனும்னா அந்த கைரேக யாருதுனு தெரியனும் ...அதுக்கு அப்புறம் தான் எல்லா உண்மையும் விளங்கும்.....கணக்கு போட்டது சிவராமனின் போலீஸ் மூளை ...
அவங்க கிளாஸ் பசங்க கைரேகைய சோதிச்சு பாத்த என்ன ....யோசிப்பதோடு இல்லாமல் கமிஷனரிடமும் அனுமதி பெற கிளம்பினான் ...
சிவராமன் எல்லாம் சரி பட் இது ஸ்டுடன்ஸ் மேட்டர் ... டூ சென்செடிவ்... சோ பீ கேர்புல்...
சார், ஐ வில் டேக் கேர் ஆப் இட் .... தாங்க் யூ சார் ...                                                                                              
காலேஜ் வாசல் ....
mam இன்னிக்கு வசந்தியோட கிளாஸ்ல யார்லாம் லீவு ...
இன்னிக்குனு இல்ல ஒரு வாரமா ரகு லீவு ...சிக்கன்பாக்ஸ்னு leave form submit பண்ணி இருக்காங்க ...
கே நான் எல்லாரோட கைரேகைய சோதிக்கலாமா??
தாராளமா சார் ..
ஆனா எதுவுமே பொருந்தல...ஒரு பையன் leave நு சரியாய் எந்த தேதினு சொல்ல முடியுமா ?
சார் அது வந்து .....சுகந்தி இறந்த அடுத்த நாள் ...??????????
அந்த பையன் வீடு அட்ரெஸ் தாங்க .......
சிவராமன் ரகு வீடு வாசலில் ........
இது ரகு வீடா உங்க பையன்ட கொஞ்சம் விஸ்ரிக்கணும் கொஞ்சம் கூப்டுங்க ...
அவன் அவன் வீட்டுல இல்ல ....சிக்கன் பாக்ஸ் நாங்க எங்க போனான் உங்க பையன் ..
அது வந்து ....
ம்மா யாரு .....உள்ளிருந்து ரகுவின் குரல் .......
வாப்பா ரகு ....எங்க சிக்கன் பாக்ஸ் லாம் சரி ஆகிட்டு போல ...
இல்ல இல்ல ..
உன் கைரேகைய கொஞ்சம் செக் பண்ணிகுறோம் ...
சார் இதே கை ரேக தா சார்.....
சொல்லு ...சுகந்தி ஏன் கொன்ன ??
யாரு சுகந்தி ? எனக்குலாம் தெரியாதே????????? ம்மா யார்மா என்ட என்னென்னவோ கேக்குறாங்க ?? ம்மா
தம்பி எல்லாம் தெரிஞ்சுட்டு உண்மைய மட்டும் சொல்லு ...இல்லனா ஜெயில் ல கூட்டிட்டு போய் விசாரிகுற மாறி பண்ணிடாத ?? ஆமா சொல்லிட்டேன் ..
அம்மா அப்பாவ வர சொல்லு...
உங்க அப்பா  மேட்டுப்பட்டி இன்ஸ்பெக்டர்ட பேசுனது வச்சு உங்க அப்பா கால்ல trace பண்ணிட்டோம் ..இனிமே உங்களால எதுவும் பண்ண முடியாது...
அவங்கள அப்றோம் வர சொல்லலாம் ...இப்போ எண்ட சொல்லு ....
சுகந்திய நீ தானே கொன்ன ??
ஆமா ..எதுக்காக கொன்ன ...என்ன love பண்ணி ஏமாத்திட்டா ...என்ன சொல்ற ...
நானும் , சுகந்தியும் facebookl ல தா friend ஆனோம் ...நல்லா பேசுனோம் ...love பண்றேன்னு சொன்னேன் ...அவளும் பண்றேன்னு சொன்னா ...phone லயும் பேசுனோம் ...no யும் பிளாக் பண்ணிட்டா .... திடிர்னு account close பண்ணிட்டா..நேர்ல பொய் கேட்டா ? நான் எப்போ அப்டி பண்ணேன்...நான் facebook லே இல்லனு சொல்லி என்ன ஏமாத்த பாத்த....அதுனால தான் மன்னிப்பு சொல்றேன் சொல்லி அவல வர சொல்லி அவல கொன்னு யார்க்கும் தெரியாம இருக்க ..ரயில்வே ட்ராக் ல வீசிட்டு வீட்டுக்கு வந்துட்டேன்...நன் நார்மலா இல்லமா இருக்கறத பாத்துட்டு அப்பா கண்டுபிடிச்சுட்டாங்க....அதுக்கு அப்றோம் காலேஜ் போக வேணாம்னு அம்மா த சொல்லிட்டு..நான் பாத்துக்குறேனு சொல்லிட்டாங்க ..
நேர்ல பேசிக்க மாடிங்களா ??
இப்போதைக்கு வேணாம்னு அவ தா சொல்லி இருந்தா
உங்க அப்பா  மேட்டுப்பட்டி இன்ஸ்பெக்டர்ட பேசுனது வச்சு உங்க அப்பா கால்ல trace பண்ணிட்டோம் ..இனிமே உங்களால எதுவும் பண்ண முடியாது...சரி அவ உனக்கு பண்ண மெசேஜ்லாம் காட்டு....
சிவராம் கான்ஸ்டபிலிடம் இது யாருடைய account யார் use பண்ணதுனு கண்டுபிடிங்க ..அந்த பொண்ணு no வச்சு சிம் யார் நேம் ல இருக்குனு கண்டுபிடிங்க ......
சார் அது மீனுனு இவங்க கிளாஸ்ல படிக்குற ஒரு பொண்ணு பேர்ல இருக்கு....
அப்டியா இது என்ன ??
அந்த காலேசுக்கு phone பண்ணி அந்த பொன்னு வந்து இருக்காளானு விசாரிங்க ....இல்லனா அட்ரஸ் வாங்குங்க
இல்ல சார் .அந்த பொண்ணு காலேஜ் அ நிப்பாட்டிடுச்சாம் ....அந்த பொண்ணு அட்ரெஸ் வாங்கிட்டேன்...
ரகுவும் போலிசும் நிற்ப்பதை கண்ட அவள் சார் நான் எல்லாமே சொல்லிடுறேன் ....
நான் தா ரகுட்ட facebookல பேசுன பொண்ணு ...ஆனா ரகுக்கு சுகந்தி மேல தா ஆசனு தெரிஞ்சுகிட்டு ...சுகந்தி facebook ல இல்லன்னு தெரிஞ்சுகிட்டு அவ பேர்ல account open பண்ணேன்... பின்னாடி உண்மைய சொல்லி நம்மள காதலிக்க சொல்லலாம்நு நினச்சேன்...ஆனா அதுக்குள்ள விஷயம் வீட்டுக்கு தெரிஞ்சு என் படிப்ப நிப்பாட்டிட்டு என் போனயும் புடிங்கிட்டாங்க...அதுனால ரகுகிட்ட என எதுவும் சொல்ல முடில்ல..இப்போ த பேப்பர் ல பாத்து எல்லாமும் தெரிஞ்சுது ..நன் த எல்லாத்துக்கும் காரணம் என்ன மன்னிச்சுடுங்க சார்....
நான் உங்களலாம் மன்னிக்க முடியாதுமா ?? உங்களால தங்களோடு எதிர்காலம் நு நினச்ச தன மகளை பறிகொடுத்துட்டு நிக்கிறவங்களுக்கு என்ன பதில் சொல்லுவிங்க ??
கண்ணும் கண்ணும் பேசிய காதல் போய்..நீங்கலாம்...உங்கள சொல்லி தப்பு இல்ல....வயசு கோளாறு....காதல் தோல்விய தாங்கிக்க மனசு இல்லாம கோல செய்யிற அளவுக்கு வக்கிர புத்தியா வளத்துக்குரிங்க ....படிப்புல 1௦௦/1௦௦ வாங்கி இப்டி வாழ்கைல பெயில் ஆகுரிங்களே..
அந்த பொண்ணு கொலைக்கான உண்மி குற்றவாளிய கண்டுபிடிக்கிறது மட்டும் தா என் வேலை..
உங்களுக்கான தண்டனைய அந்த கண் மூடிய நீதி தேவதை தருவா வாங்க ??
தன் கிராமத்துக்கு விளக்கேற்றே வந்த மலைக்கிளி....தன் மலை சிகரத்தின் மயானத்தை நோக்கி நகரத் தொடங்கி இருந்தது.......



சிகரத்தை தொட....2

சுகந்தி சென்னையில் உள்ள பிரபல கலை அறிவியல்  கல்லூரியில்  இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி ..
மலைகிராமத்து அழகு தேவதை ....மனதளவிலும் ...
ஆங்கில வாடையே இல்லாமல் வளர்ந்த அவளுக்கு முதலில் தடுமாறினாலும் ஒரு வருடத்தில் ஆங்கிலம் மெதுவாக அவளுக்கு சரளமாக தொடங்கி இருந்தது ..
அவளின் பழக்கவழக்கம் அங்குள்ளர்வர்களுக்கும் ,அங்குள்ளவர்களின் பழக்கவழக்கம் இவளுக்கும் முதலில் புரியா புதிராக இருந்தாலும் அவளின் இயல்பான பண்பு அவளை மற்றவர்களுடன் நெருக்கமாக்கியது .
மலைவாழ் பெண்ணாக இருப்பினும் அவளின் முயற்சி கண்டு ஆசிரியர்களும் முழு ஒத்துழைப்பு தந்தனர் ...
சென்னையில் கல்லூரியில் வெளி ஹாஸ்டலில் தங்கி படித்து வந்தாள். ஆரம்பத்தில் அம்மா அப்பாவின் பிரிவு ரொம்ப வருத்தினாலும் தன் இனத்திற்கு குறிப்பாக தன் இன பெண்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டும் எனும் தன் அப்பாவின் ஆசை அவளுக்கு உறுதி தந்தது.....
அது மட்டும் இல்லை அவளுக்கென்று பிறந்தபோதே பேசி முடிக்கப்பட்ட தன் மாமன் மகன் சின்ராசுவின் ஆசையும் அதுவாக இருந்த சொல்லவா வேண்டும்...
 ஏய் !! சுகந்தி இன்னிக்கு என்னடி புது ட்ரெஸ் போல !! என்றாள் மீனு
ஆமாம் மீனு எங்க தனபாலு மாமா எடுத்து கொடுத்தாங்க !!!
நடத்து நடத்து ......
ஹே உண்ட facebook account இருக்காடி.....
அய்யோயோ அதெல்லாம் எண்ட இல்லபா...
எங்க மாமா ஊருக்கு இங்க காலேஜ் சேத்து விடும் போதே அதெல்லாம் வச்சுக்க கூடாது நு தெளிவா சொல்லிட்டாங்க ....
அடி போடி எந்த காலத்துல இருக்க !!
அதுல எனக்கு ரகுனு ஒரு பையன் பிரண்டு டி...
எப்டி டி தெரியும் அவன உனக்கு ?
அவன தெரியாது ....ஆனா அவன் தன் friend request கொடுத்தான் ..
profile பாத்தேன்.. நல்ல பையனா தெரிஞ்சது அதான் அக்செப்ட் பண்ணிட்டேன்..
அது எப்டி போன் லே நல்ல பையன்னு தெரியும் ..
time line பாத்தனே .....
சரி சரி பாத்து use பண்ணு ........
மீனுவும் சுகந்தியும் ஓரே  கிளாஸ்தான் ......
ரெண்டு பெரும் இணைபிரியா தோழிகள் என்று சொல்லவிட்டாலும் சுகந்தி எல்லோருடனும் நட்புடன் பழகுவது போன்றே இவளுடனும் பழகினாள் ......
மாமா கையெழுத்து போடாதிங்க ......சன்னமாக ஒலித்தது அந்த குரல் .....
தனபாலு பொன்னையாவின் மச்சான் ..... சுகந்தியின் தாய்மாமன் ...
அந்த ஊரில் சொல்லிகொள்ளும் அளவிற்கு 1 ஆம் வகுப்பு படித்திருந்தான் .. மேட்டுப்பட்டி எஸ்டேட்டில் சூப்பர்வைசர்  ஆக வேலை பார்க்கிறான்..
தனபாலு நம்ம புள்ளைய பத்தி என்ன என்னவோ சொல்றங்கயா ...என்னனு கேளுய்ய ...
மாமா விஷயம் இப்போ தான் கேள்விபட்டேன்... எதையும் தெளிவா தெரிஞ்சுக்காம எதுவும் பண்ண வேணம்... சார் நாங்க எங்க பொண்ணு உடம்ப பாக்கணும் ...
முடியாதுனு சொன்னிங்கனா... இந்த மாவட்ட கலெக்டர்ட்ட  மனு கொடுப்போம் ...
சார் இவன் விவகாரம் பிடிச்சவன இருக்கான் ..நமக்கு என்னா சென்னைல போய் பாக்கட்டும் ... என்றான் கான்ஸ்டபில் ..
இல்லையா   இப்டி சொல்ல சொல்லி தான் மேலிடத்து உத்தரவு ....ஒன்னும் தெரியாதவங்கநநு நெனச்சு சரின்னுடனே ...
சரி இரு வறேன்........
அய்யா !! நான் மேட்டுப்பட்டி  இன்ஸ்பெக்டர்  பேசுறேன்.. இங்க சேது போன பொண்ணோட மாமானு ஒருத்தன்  பொண்ணோட உடம்ப காட்டலனா கலெக்டர் த மனு கொடுப்பேன்னு பேசுறான்..
என்ன பண்ணலாம் ...அவன 2 நாளைக்கு உள்ள தூக்கி வை ...மத்தவங்கள மிரட்டி அனுப்பு ..உங்க பொண்ணோட உடம்பு துண்டு துண்டா போயிட்டு அதுனால உடம்ப கொண்டு வர முடியாது  அஸ்தி கிடைக்க செய்றேன்னு சொல்லி அனுப்பிடு.. இங்க நாங்க அந்த பொணம்னு case close பண்ணிடுறோம் ...
ஆனால் அவர்கள் திட்டம் பலிக்கவில்லை ...
அதற்குள் தனபால் காணமல் போய் இருந்தான் .... கலெக்டரிடம் மனு கொடுப்பதற்காக ......
கலெக்டர் அலுவலகம்....
அனுமதி பெற்று உள்ளே நுழைந்தான் தனபால் ..
தன்னையும் , சுகந்தியையும் அறிமுகபடுத்திகொண்டு  நிகழ்ந்த அனைத்தையும் ஒன்று விடாமல் கூறினான் . தன அக்கா மாமாவையும் அவர்களிடம் இருந்து மீட்டுத் தரவும் , சுகந்தி கொலைக்கான காரணம் கண்டுபிடிக்க உதவுமாறு கெஞ்சினான் ..
ஹலோ. நான் நீலகிரி கலெக்டர் பேசுறேன் .என்னப்பா பண்றீங்க ...நீங்க பிடிச்சு வச்சு இருக்க போன்னையவயும் அவங்க வைப்பையும் இங்க கூட்டிட்டு வாங்க...
கலெக்டர் அலுவலகத்தை போலீஸ் ஜீப் நெருங்கும் முன் தகவல் பறந்து இருந்தது சென்னைக்கு ....
பின்னாலே பறந்தது மற்றொரு வாகனம் சுகந்தியின் அம்மா அப்பா தனபாலோடு கலெக்டர் ஆல் அனுப்பப்பட்ட சிறப்பு குழுவோடு .......
இறப்பின் காரணம் அறிய.....




  

மதங்களைத் தாண்டி, மொழிகளைத் தாண்டி ஒலித்தது அந்த ஓலக்குரல் !

இன்றும் மறக்க இயலவில்லை ! அந்த கோர அலைகளின் கொடூரத்தை! இதோ சரசரவென்று பதினான்கு வருடங்கள் ஓடிவிட்டன. ஆனாலும் அந்த அலைகள் ஏற்படுத்திய வ...