Wednesday 17 October 2018

என் அப்பாவின் முத்தம் !


என் வாழ்க்கையின்முதல்  கதாநாயகனாக என் அப்பாவுக்கு அவர் மகளின் கடிதம் ...
அப்பா எப்படி இருக்கிறீர்கள் ? அம்மா நிச்சயம் உங்களை நன்றாக தான் பார்த்துக் கொள்வார் .
ஆனால் எனக்கு தான் எப்பொழுதும் உங்களைப் பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது.
என் 20 வயது வரையிலான ஒவ்வொரு அத்தியாத்திலும் என் கூடவே இருந்தீர்கள்  .
நீங்கள் என்னைப் பற்றி எத்தகைய கனவு கண்டீர்கள்  என்று எனக்கு தெரியாது அப்பா ...
ஆனால் என் வாழ்வின் ஒவ்வொரு கனவிலும் உங்களின் கைப்பிடி இருந்தது .
அது சரியோ ? தவறோ ? என்று எனக்கு தெரியாது . ஆனால் அம்மா ஒவ்வொரு நாளும் என்னை ஒரு பெண்ணாக வளர்க்க படாதப்பாடு படும்  பொழுதெல்லாம்
 "அவள் கிடக்கிறாள் செல்லம் ...நீ  உனக்கு பிடித்ததைச் செய் " என்று சொல்லும் வார்த்தைகள் தான் எனக்கு வேதவாக்கு .
அம்மாவின் கைகள் என்னை அடிக்க ஓங்கியபோதும் உன் கரங்கள் தான் தடுத்து நிறுத்தின .அந்த கைகள் என்னை கட்டியணைத்தனவே தவிர ஒருபோதும் என்னை காயப்படுத்தியது இல்லை .
ஆனாலும் நான் உங்களுக்கு செய்த தொந்தரவு கொஞ்சம் நெஞ்சம் இல்ல ... இருந்த போதும் அதை உங்களால் ரசிக்க முடிந்ததே தவிர என்னை வெறுக்க முடியவில்லை .
ஒவ்வொரு தடவையும்  நான் கடைக்கு செல்லும் போதும் விலையைத் தேடித் தேடி பார்க்கும் என்னை செல்லமாகத் தட்டி
 "உனக்கு பிடித்ததை மட்டும் பார் ? விலையைப் பற்றி உனக்கு என்ன ? "
 என்று கூறும் நீங்கள் ஒரு நாளும் உங்களுக்கென்று எதுவும் வாங்கி கொண்டதில்லை .
உங்கள் கைக்கடிகாரம் உடைந்த போதும் அதையே சரி பண்ணி போட்டுக் கொண்ட நீங்கள் நான் கேட்டேன் என்று விலை உயர்ந்த கடிகாரம் வாங்கி கொடுத்தப் போதும் உங்கள் கைகளை நான் பார்க்கவில்லை ! பார்க்கவும் தோணவில்லை !
" எல்லோரும் பொண்ணை இப்படி செல்லமாக வளர்க்காதே !!! இன்னும் கொஞ்ச நாளில் இன்னொரு வீட்டுக்கு போகிறவள் "என்று சொல்லும்போதும் உங்கள் அரவணைப்பு என்னை விட்டு விலகவே இல்லை . சொல்லபோனால் அதிகமாய் தான் ஆகியது .
ஒவ்வொரு முறையும் என்னிடம் முத்தம் வாங்கிவிட்டு வேலைக்கு செல்லும் நீங்கள் வெளியூருக்கு போனாலும் அம்மாவிடம் கேட்கும் முதல் கேள்வி பாப்பா என்ன செய்கிறாள் என்பதே ...
என் அம்மா என்னை 10 மாதம் வயிற்றில் சுமந்தாலும் நீங்கள் தான் என்னை 20 வருடங்களாக தரையில் என் கால் படாமல் சுமக்கிறீர்கள் .
அம்மாவால் உங்களிடம் சாதிக்க முடியாத பல காரியங்கள் நான் கேட்டுவிட்டேன் என்ற காரணத்திற்காக அவசர அவசரமாக செய்து முடிப்பீர்கள் .
நான் சாப்பிட வேண்டும் அதுவும் ஒரு இளவரசி போல !!!என்பதே உங்களின் ஒரு நாளைய அதிகபட்ச ஆசையாக இருக்கும் .
ஆனாலும் எனக்கு ஒரு குறை அப்பா ...
அதுவரை என்னை தூக்கி கொஞ்சிய உங்கள் கைகள் நான் பருவம் அடைந்தேன் என்று தெரிந்த பிறகு  தூர இருந்தே கொஞ்ச ஆரம்பித்தன .
இப்பொழுதும் எனக்கு ஆசையாக இருக்கிறது அப்பா ...உங்கள் கூடவே இருந்து விடவேண்டும் என்று !!!
நீங்கள் என் கூட இருந்தவரை உங்களை எனக்கு புரியவில்லை .
என் திருமணமான நாளில் உங்களின் கண்களின் கண்ணீர் முதல்முறையாக என்னை ஏதோ செய்தது . இங்கு வந்த பிறகு ஒவ்வொரு நாளும் நான் செய்யும் தப்புகளை என் புக்ககம் திருத்திக் கொள்ள சொல்லும் போது உங்களின் நினைவு என் கண்களில் வந்து போகிறது.
என் தப்புகளை எல்லாம் என் அப்பா எப்படி சரியாக்கி என்னை தப்புவித்தார் என்று ?
அடுத்த ஜென்மத்தில் உங்களுக்கு ஒரு தாயாகி நீங்கள் செய்ததில் ஒரு பகுதியாவது செய்துவிட மாட்டேனா ? என்பதே என் அனுதின பிரார்த்தனை அப்பா !!!
மகளாகப் பிறந்தவளுக்கு தான் தெரியும் அப்பாவின் முத்தம் என் கணவனின் முத்தத்தை விட விலை உயர்ந்தது என்று !!!
இப்படிக்கு
உங்களின் இளவரசி .


மதங்களைத் தாண்டி, மொழிகளைத் தாண்டி ஒலித்தது அந்த ஓலக்குரல் !

இன்றும் மறக்க இயலவில்லை ! அந்த கோர அலைகளின் கொடூரத்தை! இதோ சரசரவென்று பதினான்கு வருடங்கள் ஓடிவிட்டன. ஆனாலும் அந்த அலைகள் ஏற்படுத்திய வ...