Friday, 19 May 2017

தலாக் முறை

இன்று காலையிலிருந்து என் மனத்தை உறுத்தும் ஒரு விஷயம் தலாக் முறை ...
ஒரு மதத்தை பற்றி விமர்சிக்கவோ அல்லது குறைகூறவோ எனக்கு உரிமை இல்லாமல் இருக்கலாம் . ஆனால் அதுவே ஒரு பெண்ணுக்கு இந்த சமுகம் விளைவிக்கும் கொடுமை என்னும் பட்சத்தில் அதை பற்றி பேசாமல் இருப்பது அதை விட கொடுமையாகும் ,
மதத்திற்கும் , எனக்கும் எவ்வித மனத்தாங்கலும் இல்லை . இப்பொழுது நான் கூறப்போகும் விஷயங்கள் மூலம் நான் யார் மனதையும் புண்படுத்தவும் விரும்பவில்லை . அதன் கொள்கையையும் , அதன் விளைவையும் சாடியே பேச விளைகிறேன் .
உடன்கட்டை ஏறும் வழக்கம் ஒரு காலத்தில் முக்கிய சடங்காக இருந்து இன்று அது இந்திய மண்ணில் முற்றிலும் ஒழிக்கப்பட்டு முற்போக்கு எண்ணம் வளர்ந்ததன் முக்கிய காரணம் சட்டங்களும் , அதை நிலைநாட்ட பலர் மேற்கொண்ட அரிய முயற்சிகளுமே காரணம் . அதை போன்ற சிறு முயற்சியே இது .
தலாக் என்றால் என்ன ?
இஸ்லாமிய கொள்கையின் படி , தலாக் என்பது விவாகரத்துக்கு இணையானது .
தலாக் என்றால் ” விடுவித்தல் “ என்று பொருளாகும் .
இதில் முத்தலாக் என்றால் மூன்று முறை தலாக் சொல்வது . பலர் இதை ஒரே நேரத்தில் சொல்வது என்று பொருள் கொள்கிறார்கள் ஆனால் முத்தலாக் வழக்கத்தின்படி ஒரு பெண்ணின் மூன்று மாதவிடாய் கால இடைவெளியில் மூன்று முறை தலாக் சொல்ல வேண்டும் . முதல் இரண்டு தடவைகளும் வாய்ப்புகளே!!! மூன்றாவது முறையும் அவர் அப்படி சொல்லும் பட்சத்தில் இருவரும் விவாகரத்து பெற்றவர்கள் ஆவர் .
அதன் பிறகும் இருவரும் தங்களுக்குள் ஏற்பட்ட மனத்தாங்கலை விடுத்து சேர்ந்து வாழ முற்பட்டால் அது இஸ்லாமிய கொள்கையின் படி பாவமான காரியமாகும்.
வேண்டுமானால் அந்த பெண் இன்னொரு ஆண் மகனுடன் திருமணம் செய்து கொண்டு முத்தலாக் பெற்றவுடன் வேண்டுமானால் மீண்டும் தன் முதல் கணவருடன் சேர்ந்து வாழ முடியும் .
அந்த மூன்று மாத கால இடைவெளியும், அந்த இடைப்பட்ட காலமும் அந்த பெண் கருவுற்றதை கண்டறிய தான் ... ஒருவேளை அந்த பெண் கவுற்றதை அறிந்து அந்த ஆண் இரண்டு தலாக்கிற்கு பின்னும் சேர்ந்து வாழ முடியும் . ஆனால் அது அந்த ஆணின் விருப்பத்தை சார்ந்தது .
இதுவே தலாக்கை பற்றி குரான் கூறுவதாக இஸ்லாமிய மதகுருமார்கள் கூறுபவை .....

மேற்கூறியவற்றைக் கொண்டே இந்த சட்டம் ஆண்களுக்கானது என்பது தெளிவாக விளங்கும் . அதாவது ,
“ முள்ளில் சேலை மாட்டினாலும் , சேலையில் முள் மாட்டினாலும் பாதிப்பு சேலைக்கே ... “ என்பது போல் இந்த சட்டத்தின் பாதிப்பு முழுவதும் பெண்களுக்கு தான் . தலாக் ஒரு ஆண் , பெண் விவாகரத்துக்கான சட்டம் என விளக்கினாலும் ,
இஸ்லாமை பொறுத்த வரை திருமணம் ஒரு ஒப்பந்தமே தவிர நிரந்தரம் இல்லை
என விளக்கம் கூறினாலும் அதில் பெண் ஒரு பகடையே தவிர ஆடுவிப்பவர்கள் ஆண்கள் என்பதையே இச்சட்டம் சுட்டுகிறது .
மூன்று முறை தலாக் கூறினாலும் அது ஆண்களின் விருப்பத்தையே பிரதிபலிக்குமே தவிர , பெண்ணின் உணர்வுகளுக்கு அங்கு மதிப்பில்லை. ஆண் வேண்டாம் எனும் பட்சத்தில் அந்த பெண் ஒரு பயனில்லா பொருள் ஆகிறாள் . சட்டங்களும் ,மதங்களும் மனிதனை நெறிப்படுத்தவும் , பக்குவப்படுத்தவும் உண்டானவை . ஆனால் அது ஒரு கண்ணில் வெண்ணையும் , மற்றொரு கண்ணில் சுண்ணாம்பும் காட்டும் பட்சத்தில் உரிமைக் கேட்டு போராடும் குரல்களுக்கு செவி சாய்ப்பது அரசின் கடமையாகும் .
இந்தியாவின் பன்முகத் தன்மை இன்றளவும் கொடிகட்டி பறப்பதன் காரணம் , அது சட்டங்களை தாண்டிய மனிதத்தையும் , உணர்வையும் தன் தீர்ப்பின் மூலம்  நிலைநாட்டி கொண்டு இருப்பதாலே ....
சதி என்னும் உடன்கட்டை ஏறும் வழக்கம் ஒழிக்கும் சமயத்தில் அதுவும் இந்து மத கொள்கைகளை மீறுவதாகவே கருதப்பட்டு இருக்கும் . ஆனால் அந்த சட்டம் என் அம்மாவையும் , அக்காவையும் , என் மனைவியையும் அவர்கள் விரும்பாத சிதையிலிருந்து மீட்டது என்று நினைக்கும் பொழுது அச்சட்டத்தின் நோக்கம் அனைத்து இந்து மதத்தினரும் ஏற்றுக்கொள்ளக் கூடியது என்று புலப்பட்டது .
அதுபோல தலாக் சட்டம் இஸ்லாம் மத உணர்வை அவமதிப்பதாக கருதாமல் உங்கள் தங்கையோ , மகளோ யாரோ ஒருவரிடம் முத்தலாக் பெற்று இந்த சமுகத்தில் அவமதிக்கப்படும் அவலத்தை மனதிற் கொண்டு தலாக்கை தடை செய்யும் இச்சட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டுகிறேன்.
நம் மதம் தாண்டிய இஸ்லாம் மத சகோதரிகளின் உணர்வுக்காக இதை சமர்ப்பிக்கிறேன் .

இப்படிக்கு ஒரு இந்தியன்         

2 comments:

மதங்களைத் தாண்டி, மொழிகளைத் தாண்டி ஒலித்தது அந்த ஓலக்குரல் !

இன்றும் மறக்க இயலவில்லை ! அந்த கோர அலைகளின் கொடூரத்தை! இதோ சரசரவென்று பதினான்கு வருடங்கள் ஓடிவிட்டன. ஆனாலும் அந்த அலைகள் ஏற்படுத்திய வ...