எனக்கும் காதல் தான் ......
அழகிய தென்றலாக உன்னை ஊடுருவி,
சிறு துளியாக ஓடையில் உருவாகி ,
மேடுபள்ளம் கடந்து,
என் தாய் வீடு தொலைத்து,
மணாளனை காண வேண்டும் என்னும் மையல் மனதை உந்த,
தூரம் ஆயிரம் கடந்து,
தடைகள் பல உடைத்து,
அணைகள் பல தாண்டி,
சோலைகள் பல செழிக்கச் செய்தாலும்,
உன் செம்மேனி தரும் சிலாகிப்பை அனுபவிக்க,
உன் ஆண்மை திறம் கண்டு வெட்கப்பட,
உன் கடல் என்னும் சந்நிதியில் எந்நிலை இழந்து நீயே நானாகி,
உன்னிலே சரணாகி ...
மீண்டும் ஆவியாகி மறுபிறப்பு எடுத்து உன்னையே அடைய வேண்டும் என்று ...
எனக்கும் ஆசை தான் .......
உன் விதைகளின் ஊடாக ஓடி விளையாட வேண்டும் என்றும் ...
நீ வெட்டிய வரப்புகளில் என் பயணம் தொடர வேண்டும் என்றும்...
உன் நாற்றுகளில் என் மேனி தழுவி சிலிர்க்க வேண்டும் என்றும்...
உன் கதிர்மணிகள் என் மேனியில் அதன் முகம் கண்டு வெட்கப்பட்டு தலைகுனிவதை காண வேண்டும் என்றும் ...
என்னையே கொடுத்து நெல்மணியாக உருப்பெற்று ,
உன் பொங்கல் புது விழாவில் பொங்கலாக பொங்கி,
உன் வாழ்வை பொங்கச் செய்யும் வேண்டும் என்றும் ...
எனக்கும் ஏக்கம் தான் ........
வேர்த்து விறுவிறுத்து வீடுத் திரும்பும் வீர ஆண்மகனின் தாகம் போக்கும் வரம் கிடைக்காதா என்று ?
சங்கு போன்ற கழுத்து உடைய மங்கையின் இடுப்பு குடத்து நீராகும் வரம் கிடைக்காதா என்று ?
இது மேனியா இல்லை இல்லை இளம்பூவின் இதழா எனும் சந்தேகமுடைய பிஞ்சு குழந்தையின் உடலை வருடும் வரம் கிடைக்காதா என்று ?
பலர் பாவம் போக்கும் புண்ணியவானாக பொங்கி எழும் வரம் கிடைக்காதா என்று ?
இந்த புண்ணியபூமியை பாவப் படுத்தும் ஆதிக்க அரசியலை ஒழிக்க வீறு கொண்டு எழும் வரம் கிடைக்காதா என்று ?
நான் வரவில்லை என சபிக்கும் உங்களுக்கு ,
" உங்களின் பொறுப்பற்ற , தொழில்மயமாக்கப்பட்ட , நகரமயமாக்கப்பட்ட, நாகரிகமற்ற வாழ்வே காரணம் எனும் என் நிலை விளக்கும் வர வேண்டும் என்று ? "
கிடைக்குமா ?
என் காதல் கைகூடுமா ?
என் ஆசை நிறைவேறுமா ?
என் ஏக்கம் தீருமா ?
இப்படிக்கு ,
பெய்யா மழை
No comments:
Post a Comment