Wednesday, 17 May 2017

எது காதல் ?

நாம் என்ன தான் 21 ஆம்  நூற்றாண்டில் வாழ்ந்து வந்தாலும் , என்ன தான் நாகரிக முன்னேற்றம் அடைந்தாலும் நம் மத்தியில் காதலின் மீதான விமர்சனங்களுக்கு எவ்வித குறைவும் இல்லை !!! காதலின் மீதான சமுகத்தின் பார்வையும் மாறவில்லை !!!
காதலின் மீதான வாதங்களையும் விவாதங்களையும் கொண்டு ஒவ்வொரு நாளும் ஒரு வினாக் குறியோடு தான் நாம் பயணித்து கொண்டு இருக்கிறோம் .
எனது சிறு வயது முதலே எனக்கு ஒரு சந்தேகம் ?
“ காதலுக்கான இலக்கணம் தான் என்ன ? “
கண்ணும் கண்ணும் கவிதை பேச ;
மனம் இரண்டும் உலகை மறக்க ;
சுற்றி உள்ள சூழ்நிலைகள் கவிதை பாட ;
வாழ்வின் உன்னத உறவை கரம் பிடிக்க மனம் உண்டாக்கும் துடிப்பே காதலா ?
இல்லை காதலுக்கு தான் இலக்கணம் என்ன ?காதல் என்பது ஒருவரது வாழ்க்கையில் ஒரு முறை தான் உருவாகும் உணர்வா ?
இல்லை எனில் அதன் வரைமுறைகள் தான் என்ன ?
இங்கு இல்லை எனும் விடை கிடைக்கும் போதே “ ஒருவனுக்கு ஒருத்தி தான் “ என்னும் இலக்கணம் பொய்யோ என்னும் வினாவும் தவறாமல் என்னுள் எழுகிறது .
“ ஒருத்தனுக்கு ஒருத்தி என்று விதித்தது யார் ? “ இதை ஒருத்திக்கு ஒருத்தன் என்று கூறுவதே முறையாக இருக்கும் .
புரியவில்லையா ?
கூறுகிறேன் கேளுங்கள் ;
கதைகளிலும், இதிகாசங்களிலும் ஒரு ஆண்மகனுக்கு எத்தனை காதலிகள் வேண்டுமானால் இருக்கலாம் . அரசகுல இலக்கணப் படி அவன் ஒரு வசதியான பெண்மகளை தன் மனைவியாக்கி பட்டத்து மகராணி ஆக்குகிறாள் . ஆனால் தன் ஆசைக்கு உட்பட்ட மகளிரை அந்தபுரத்து நாயகி ஆக்குகிறான் . இதற்கு வரைமுறைகள் விதிமுறைகள் இல்லை அவனுக்கு . ஆனால் அந்த அந்தபுரத்து நாயகிகள் எத்தனாவது நாயகியாக இருப்பினும் கணவனே கண் கண்ட தெய்வம் கல்லானாலும் கணவன் ; புல்லானாலும் புருஷன் ; என்று வாழ வேண்டும் என்பதே விதிமுறை .
இப்பொழுது சொல்லுங்கள் தமிழ் விதிப்படி ஒருவனுக்கு ஒருத்தியா ? இல்லை ஒருத்திக்கு ஒருத்தனா ?
இந்த இடங்களிலே நீங்கள் காதலுக்கு காட்டும் இலக்கணங்கள் பொருளற்று போகிறதே ? மெய் காதலென நீங்கள் காட்டும் உதாரணங்கள் பொய்யாகி போகிறதே ?
பைபிளில் ஒரு வரி உண்டு :
யாரும் இரண்டு தலைவர்களுக்கு பணிவிடை செய்ய இயலாது ; ஏனெனில் அவன் ஒருவரை விலக்கி மற்ற ஒருவருக்கு பணிவான் ;
இதே நிலை தான் இங்கும் ;
நீங்கள் கூறலாம் , “ இன்னும் நீ இலக்கிய இலக்கங்களை முழுமையாக அறியவில்லை . காதலுக்கும் கற்ப்புக்கும் எத்தனையோ உதாரணம் சங்க இலக்கியங்களில் உண்டு என்று “ நிச்சயம் அதை என்னால் மறுக்க முடியாது .
ஆனால் ஒரு சமுகத்தின் கட்டமைப்பு இப்படி தான் இருந்தது என்று அவை சுட்டிகாட்டும் போது அந்த ஒரு சில உதாரணம் எவ்வித தாக்கத்தை தரும் என்று யோசித்து பாருங்கள்… நாம் எல்லோரும் எவ்ளோ பெரிய முட்டாள்கள் என்று……………….
காதலின் சின்னம் தாஜ்மஹாலே எத்தனை முட்டாள் தனமான காதலை தன்னுள்ளே புதைத்து கொண்டு உள்ளது என்று தெரியுமா ?…
ஷாஜகானின் 14 வது மனைவியே மும்தாஜ் ; அவ்வாறு இருக்க 14 மனைவி மீது கொண்ட காதல் தான் அளப்பரியது என்றால் அந்த 13 மனைவிகள் அவருக்கு யார் ? அந்த 13 மனைவிமார்களின் குழந்தைகள் அன்பின் சின்னங்கள் இல்லையா ? அந்த 13 மனைவிகள் மேல் அவர் காதல் கொள்ளவில்லையா ? இங்கே காதலின் இலக்கணம் என்ன ? எது காதல் ?
தமிழ் கடவுள் முருகனின் உண்மை காதலி யார் ? இங்கே அவருக்கு யாரிடம் உண்மையான காதல் ஏற்பட்டது ? வள்ளியிடமா? இல்லை தெய்வனையிடமா ?
மேலை நாட்டு கலாச்சாரப்படி யார் வேண்டுமானாலும் யாரோடு வேண்டுமானாலும் விருப்பப்படி வாழலாம் எனில் கடைசி வரை கூட வருவதே காதல் என்னும் இலக்கணம் என்ன ஆனது ?
இவ்ளோ படித்த உங்களால் இதை விளக்க இயலுமா ?
இதுவரை பழம்கதை பேசினோம் ….
இன்றைய காதல் கட்டமைப்புக்குள் வாருங்கள் ;
இன்றைய காதல் என்றதும் நாம் நாம் எல்லோரும் சாட விரும்பவது சாதி கொலைகள் , கௌரவ கொலைகள் , பெண்ணின் மீதான காதலின் திணிப்பு என்ற சமுக பிரச்சனைகளை தான் , என்னை பொறுத்தவரை இன்றைய தலைமுறையின் காதலே ஒரு சமுகப் பிரச்சனை என்பது என் தீர்மானம் .
திரைப்படங்களில் சொல்லப்படும் காதல் கதைகளை உண்மை என்று நம்பி இன்றைய சமுகம் தவறான வழியில் சரியாக பயணித்து கொண்டு இருக்கிறது .
திரைப்படங்களை பொறுத்த வரை காதல் என்பது திருமணம் வரை தான் காட்டப்படுகிறது . கஷ்டப்பட்டு அந்த காதலர்கள் சேருவதே பெரும்பாலான திரைப்படங்களின் கருவாக உள்ளது
காதலின் பயணம் திருமணத்தோடு நின்று விடுகிறதா ? அதை சாதித்தால் எல்லாம் சரியாகி விடுமா என்ன ?
காதலின் பயணம் திருமணம் என்னும் பந்தத்தில் தொடங்குகிறதே தவிர முடியவில்லை… வாழும் வாழ்க்கையை வாழ்வது மணமக்களாகினும் அது வெறும் அந்த இருவரை சார்ந்தது அல்ல என்பதே நிதர்சனம் .
இன்றைய பெரும்பாலான காதலர்கள் சொல்லும் வசனம் ,
“ எனக்கு பிடித்தவளை / பிடித்தவனை என் வாழ்க்கை துணையாக்க யாருடைய சம்மதமும் எனக்கு தேவை இல்லை , உங்கள் விருப்பம் இல்லாவிட்டலும் நான் அவளை / அவனை திருமணம் செய்தே தீருவேன் “
இதெல்லாம் படங்களில் கைத்தட்டல்களை தரும் ஹீரோவின் வசனங்கள் தான் .
ஆனால் நிஜம் வேறு … நிழல் வேறு ….
திருமணம் செய்த பிறகு தாம் என்ன செய்ய போகிறோம் என்றே பெரும்பாலான காதலர்களுக்கு தெரிவதில்லை .
15 வயதில் ஒருவனை/ஒருத்தியை காதலித்து , 2 வருடம் ஆகும் முன்னே பிரேக்அப் என்று கழற்றி விட்டு , அவன்/அவள் நமக்கு சரி பட்டு வரமாட்டார்கள் என்று அடுத்தவர்களை தேடி போகும் அளவில் தான் இன்றைய காதல் கதைகள் உள்ளன . இது எங்கோ நடக்கும் நிகழ்வுகள் அல்ல . நம் உடன் படிக்கும் நண்பர்கள் , உடன் வேலை செய்பவர்கள் என் எல்லோரும் இப்படி தான் இருக்கிறோம் .
அப்படியே அவர்கள் திருமணம் செய்து கொண்டாலும் பெரும்பாலான பெற்றோர்கள் ஏற்று கொள்வதில்லை . தன் பெற்றோரால் புறக்கணிக்கப் படும் நிலையில் , தன் குடும்பத்தினரை பெரும்பாலும் எந்த நிலையிலும் சந்திக்க இயலாமலும் , எந்த விசேஷங்களுக்கும் செல்ல முடியாமலும் , தன் கருவுற்று இருக்கும் நிலையில் தன்னை பெற்றவளின் அனுசரிப்பையும் , உற்றார் உறவினரின் அரவணைப்பையும் பெற முடியாமல் இவன் ஒருவனை / ஒருத்தியை கைப் பிடிக்க எல்லா உறவையும் பகைத்து கொண்டோமே என்று நினைக்காத மனங்கள் இல்லை எனலாம் .
இவை எல்லாம் என் நேரில் நான் அனுபவித்த உண்மைகள் .
எனக்கு ஒரு அப்பொழுது 13 , 14 வயது இருக்கலாம் . எல்லோர் போன்றும் எனக்குள்ளும் அந்த காதலின் ஈர்ப்பை உணரத் தொடங்கிய பருவம் அது .
எங்கள் வீட்டிற்கு அருகில் ஒரு பெண்மணி இருப்பார் . அவர் மதம் மாறி காதல் திருமணம் செய்து கொண்டவர். தன் பெற்றோரை எதிர்த்து பதிவு திருமணம் செய்து கொண்டார்கள் . முதல் இரண்டு குழந்தைகள் பிறக்கும் வரை திருமண பந்தம் சுமுகமாகவே சென்று இருந்துள்ளது . மிக மெதுவாகவே இருவரும் தங்களுக்குள் இருந்த வேறுபாடுகளை உணரத் தொடங்கினர் . அன்றிலிருந்து வாழ்க்கை போர்க்களம் ஆகிறது . என்ன ஆனாலும் நான் உன்னை கை விட மாட்டேன் என்னும் காதல் வசனங்கள் எல்லாம் கரைந்து போகத் தொடங்கியது . அம்மாவிடமும் சொல்லி அழ முடியவில்லை , அப்பா மதிக்கவே இல்லை . பிள்ளைகளுக்காகவே அவர்கள் சேர்ந்து வாழ வேண்டிய சூழல் . சமுகத்தை எதிர்த்து , பெற்றோரை பகைத்து , உறவினரையும் இழந்து யாரும் இல்லா நிலைக்கு தள்ளப்பட்டனர் . அவர்கள் எப்பொழுதும் எங்களிடம் சொல்வது உண்டு .
காதல் வாழ்க்கை பருவத்தில் நன்றாக தான் இருக்கும் , ஆனால் அது பொருந்தாத ஒன்றாக போகும் போது வாழ்வே சூனியமாகும் . தெளிவின்றி நீ செய்யும் காரியத்தின் விளைவு மிக கொடியது என்று …
இது எதுவுமே புரியாமல் எனக்கு தெரிஞ்ச ஒரு 13 வயது பையன் தான் காதலிக்கிறேன் என்ற பொழுது சற்று அதிர்ந்து தான் போனேன் .அதுவும் எதற்காக என் கூட படிக்குற எல்லோரும் காதலிக்குறாங்க நான் மட்டும் சும்மா இருக்க கடுப்பாக இருக்கு என்று … காதலுக்கான காரணம் என்னை அச்சுறுத்தியது .
குழந்தைகளிடம் பக்குவத்தையும் ,புரிதலையும் உண்டாக்க வேண்டிய ஊடகங்கள் அவர்களிடம் காதலின் தவறான முகத்தினை காண்பித்து குழப்பத்துக்கு ஆளாக்குகின்றன . அதை திருத்த வேண்டிய கல்வி முறைகள் எதை பற்றியும் கண்டு கொள்வதில்லை .
உண்மையான காதல் ஒருவனின் பக்குவத்தை பொறுத்தே அமைகிறது . அழகும் , புறத் தோற்றமும் தாண்டி ஒரு தம்பதியாக அவர்கள் வாழ்வதற்கு இருவரின் மனப்பக்குவமே தேவையாகிறது .
இன்று பெரும்பாலனவர்களிடம் இந்த நூற்றாண்டில் தொலைந்து போன ஒன்று மன முதிர்ச்சி இல்லாமை .
சாதிய திருமணங்கள் சமத்துவத்தை விதைக்கலாம் உண்மை தான் , பிரச்சனை சாதிகளில் உள்ளது எனும் போது அதை திருமணம் மாற்றி விடாது . கணவனின் சாதி கடைசி வரை அந்த குழந்தையையும் தொடர்ந்து அடுத்த தலைமுறைக்கும் சாதியை  கொண்டு செல்ல தான் போகிறது என்பதை நாம் ஏன் யோசிப்பதில்லை. சாதிய திருமணங்கள் செய்வோர் எல்லாம் எதையோ சாதித்தவர்கள் போன்று ஊடகங்கள் பேசினாலும் , அதை இந்த சமுகம் தனி மனித அளவில் அங்கீகரிக்கவில்லை என்பதே பெற்றோர்களின் காதலின் மீதான முட்டுக்கட்டைக்கு காரணம் .
எந்த பெற்றோரும் காதலுக்கு எதிரிகள் சத்தியமாக இல்லை , தான் இந்த உலகிற்கு தரும் விதை விருட்சமாவதை எந்த விவசாயியும் தடுக்கமாட்டான் . ஆனால் அந்த விருட்சத்தின் கிளை பூச்சியின் தாக்குதலுக்கு ஆளாகும் போது சிறு கிளையை கிள்ளி எறிவதன் மூலம் அந்த விருட்ச்சத்தை காக்கவும் தயங்க மாட்டான் .
சரியான ஒரு வாழ்க்கை துணையை சரியான பருவத்தில் தேர்ந்து எடுத்து இந்த சமுகத்திற்கு சிறந்த எதிர்காலத்தை தருவதே உண்மையான முதிர்ச்சி அடைந்த காதல் . ” யாரும் காதலுக்கு எதிரி இல்லை !!! இன்றைய அவசர காதலர்களுக்கே எதிரிகள் !!!… நானும் … ”
மேற்கூறியவாறு நான் எழுதியது பல்வேறு முரண்பாடுகளை தன்னுள்ளே அடக்கியது என்று எனக்கு தெரியும் . ஆனால் அவை எதுவும் இந்த சமுகம் காணாத பொய்கள் அல்ல என்று உங்களுக்கு புரியும் என நம்புகிறேன் .

No comments:

Post a Comment

மதங்களைத் தாண்டி, மொழிகளைத் தாண்டி ஒலித்தது அந்த ஓலக்குரல் !

இன்றும் மறக்க இயலவில்லை ! அந்த கோர அலைகளின் கொடூரத்தை! இதோ சரசரவென்று பதினான்கு வருடங்கள் ஓடிவிட்டன. ஆனாலும் அந்த அலைகள் ஏற்படுத்திய வ...