இலஞ்சம் இன்றி வாழ முடியுமா ?
எனும் கேள்விக்கு அசட்டுத்தனமாக முடியும் என்று பதில் கூறினாலும் , முடியாது என்பதே நிதர்சன உண்மை. மனித வாழ்வு என்பது சமுக வாழ்வு , காரணம் மனிதன் ஒரு சமுக உயிரி. ஆம் , இந்திய சமுகமே கையூட்டால் கை கட்டிபோட்டது போன்று உள்ளது எனும் போது நாம் மட்டும் இலஞ்சத்தை தவிர்க்க முடியாது என்பதே உண்மையை அறிந்தோரின் கூற்று.
நவீன கணக்கெடுப்பின்படி , 175 நாடுகளைக் கொண்ட ஆய்வில் இந்தியாவிற்கு கையூட்டில் 76 வது இடம் . அதாவது தெற்கு ஆசியாவிலே பூடானுக்கு அடுத்தப்படியாக 2 வது இடம் சிறப்பு பெற்றுள்ளது என்றே சொல்ல வேண்டும்.
இப்படி எழுத உனக்கு வெக்கமா இல்லையா ? என இங்கே பலக்குரல் குமுறலாம். ஆனால் உண்மை நிலை இப்படி அல்லவா இருக்கிறது.
“ இந்தியா இன்னும் ஏழை நாடாகவே உள்ளது. ஏனெனில் , மற்ற நாடுகளில் கடமையை மீறினால் கையூட்டு . ஆனால் இந்தியாவில் கடமையை செய்வதற்கே கையூட்டு ! “
என்ற இந்தியன் பட வசனத்திற்கு கை தட்டாத கைகளும் உண்டா ! ஆனால் நிலைமை வேறு !
இன்றிக்கு சாதி சான்றிதழ் வாங்குவதில் தொடங்கி , சாலை போடுவது வரை இலஞ்சம் தான் . கிராம பஞ்சாயத்துக்களில் தொடங்கி பாராளுமன்றம் வரை கையூட்டு தான் . ஆட்சியளர்கள் மாறலாம் ! ஆட்சி மாறலாம் ! இலஞ்சம் மட்டும் மாறது ! ஊழல் மட்டுமே நிலையானது ! என்பது இன்றைய அரசியல் சாசனத்தில் எழுதப்படாத வரைமுறைகள் !
இன்றைக்கு ஒவ்வொரு அரசு அலுவகத்திலும் அரசு அதிகாரிக்கு இலஞ்சம் பெற்று தரவே அரசு நியமிக்காத ஒரு அரசாங்க ஊழியராக ஒரு இடைத்தரகர் இருக்கத்தான் செய்கிறார்... அவர்தான் உண்மையில் அரசாங்கத்திற்கும் மக்களுக்குமான இடைப்பாலம் ! ஏனெனில் அவரை சார்ந்து தானே இலஞ்சத்தின் அளவு நிர்ணயிக்கப்படுகிறது!
இதெல்லாம் யாருக்கும் தெரியாத சிதம்பர ரகசியமா என்ன ? அப்படியேனில் இலஞ்ச ஒழிப்புத்துறையும் இலஞ்சத்துக்கு அடிமை என்று தானே அர்த்தம். நாங்களும் அரசாங்கத் துறைகளுள் ஒன்று எனக் காட்ட எப்பொழுதாவது 5௦௦, 1௦௦௦ வாங்கிய அதிகாரியிடம் தன் அதிகாரத்தை காட்டும்.
ஆனால், ஒவ்வொரு துறைக்கும் ஒதுக்கப்படும் கோடிகளை விழுங்கி எங்கோ ஒரு மூலையில் வாழ்ந்தவர்கள் , கோடிகளில் புரள்வது எப்படி என யாருக்கும் தெரியாது போல் !
நாட்டின் வரிப்பணம் முழுவதும் வரியில்லா பணமாக சுவிஸ் வங்கியில் பதுங்கியிருப்பதை நாடே அறியும் ! ஆனால் யாரென்று பாவம் அந்த அரசாங்கத்தலே அறிய முடியாத இல்லை இல்லை சொல்ல முடியாத அவல நிலையை என்னவென்று சொல்வது ...
தேர்தலுக்கு 539 கோடி எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை ! அவ்வளுவும் அரசாங்க பணம் என்றால் உரிமம் எங்கே ? உரிமம் இல்லை மர்மமே இன்னும் தொடர்கிறது .ஒவ்வொரு அரசு மருத்துவமனையிலும் அமரர் ஊர்தி இலவசமாம். ஆனால் , சமிபத்தில் மருத்துவமனையில் இறந்த மனைவியை கணவனும் , மகளும் 1௦ கி.மீ தூரத்தில் உள்ள மயானத்திற்கு எடுத்து சென்றது ஏன் என நான் சொல்லவும் வேண்டுமோ?
அரசாங்க வேலை பெறுவதற்கு தரும் பணத்தை இப்படி இலஞ்சம் வாங்கி தான் ஈடுகட்ட முடிகிறது . இப்படி கடை நிலை ஊழியன் முதல் கவர்னர் வரை இலஞ்சம் பெறாத மகான்களே இல்லை எனலாம் இந்த திருநாட்டில்.
ஒவ்வொரு வருடமும் இன்ஜினியரிங் , மெடிக்கல் சீட் வாங்க இலட்சம் முதல் கோடி வரை நன்கொடை பெறப்படுகின்றன. அந்த கல்லூரிகள் அரசாங்கத்துக்கு கொடுக்கும் இலஞ்சம் மூலம் தரம் பெறுகின்றன.
சான்று ( சேத்தன் பகத் : REVOLUTION 2020 )
தரம் அற்ற கல்லூரிகளில் படித்த மாணவர்களின் தலைவிதி தலைகீழாய் மாறி போகிறது.
சமீபத்தில் நீட் தேர்வு அமல்படுத்திய பிறகு அரசாங்கத்தால் ஒரு அமர்வு குழு ஏற்படுத்தப்பட்டு தரமற்ற கல்லூரிகளை தடை செய்ய வேண்டி ஒரு அறிக்கை வெளியிட்டது. ஆனால் அந்த அமர்வு குழு அரசாங்கத்தால் ஏற்கனவே தரமற்றதாக நிர்ணயம் செய்யப்பட்ட கல்லூரியை தரமானதாக்க போராடுகிறது . காரணம் ???
இதன் விளைவு ஆசைமிக்க பல திறமைமிக்க கிராமப்புற மாணவர்களின் கனவுகள் இவர்களின் கையூட்டலால் கரைந்து போகிறது.
இன்றைய காவேரி பிரச்சனையை கோலாகலமாக , அரசியல் பின்னணியோடு , அரசியல் பலத்திற்காக அடித்தர மக்களை கொண்டு அமர்க்களப்படுத்தி வருகிறார்கள். ஆனால் பாலம் கட்டுவதற்கும் , தூர்வாருவதற்கும் கொடுத்த நிதியெல்லாம் முழுவதும் பயன்படுத்தி இருந்தால் தண்ணீர் பஞ்சமே வந்திருக்காதே!
எதிர்கட்சி வெள்ளத் தடுப்பு நடவடிக்கையை விரும்பி அழைக்கிறது. கூவம் நதியை சுத்தம் செய்ய ஒதுக்கப்பட்ட 1௦௦௦ கோடியை மாதிரியை ஆய்வு செய்யவே செலவிட்டு இருக்கிறார்கள்.ஒருவேளை கூவம் நதி தூர்வாரப்பட்டு இருந்தால் வெள்ளம் இல்லை இல்லை மழைநீர் அதன் போக்கிலே அழகாக போய் விடுமே !
“ நாகரிகம் தொடங்க வித்திட்ட ஆறுகள் இன்று நாதியின்றி மணல் கொள்ளையால் மேலாடை பறிக்கப்பட்டு மானம் இழந்து நிற்க காரணமும் இந்த இலஞ்சத்தால் தான் ! “
உண்மையாக சொல்லப்போனால் என்னை போன்றவர்களுக்கு தேர்தல் என்ற சொல்லே “ ஓட்டுக்கு பணம் “ எனும் வார்த்தையால் தான் பிரபலமானது. கொடுமை என்னவெனில் என் பக்கத்து வீட்டு அத்தை சொல்கிறார் மேலத்தெருவில் ஒரு ஓட்டுக்கு 5௦௦ ரூபாயாம் நமக்கு எல்லாம் 25௦ ருபாய் தான் என வருத்ததோடு சொல்வதை கேட்கும் போது செங்குருதி சிந்தி வந்த சுதந்திரமும் , குடியரசும் 5௦௦ , 1௦௦௦ க்கும் ஒவ்வொரு ஊரிலும் விற்கப்படுகிறது.
அப்படி எனில் நீ மட்டும் இதற்கு விதிவிலக்கா எனக் கேட்டால் இல்லை என்பது தான் நிஜம். இந்தியன் படம் மாறி தனித்து நின்று இதை சாதிக்க யாருக்கும் விருப்பமும் இல்லை , நேரமும் இல்லை.. அன்னா ஹசாரே போன்று போராட உறுதியும் இல்லை.
ஆனால் எனக்கு உரைத்த ஒரு விஷயம் இந்தியா முழுவதும் 2௦௦௦ க்கும் மேற்ப்பட்ட IAS அதிகாரிகள் பதவியில் இருக்க சகாயத்தை மட்டும் ஒரு கூட்டம் பின்தொடர காரணம் என்ன ? காரணம் எல்லோரிடமும் நானும் நேர்மையானவனாக , நல்லவனாக , சமூகத்துக்கு என்னால் முடிந்த நல்லது செய்ய வேண்டும் எனும் ஆசை உள்ளது. ஆனால் , சூழ்நிலைக்கு நாம் ஒவ்வொருவரும் அடிமையாகி நாம் மட்டும் நேர்மையாய் இருந்து என்ன சாதிக்க போகிறேன் என்று எல்லோரும் விழுந்த வலையில் நாமும் விழுகிறோம் .
எனக்கு தெரிந்ததை சொல்லுகிறேன் ,
நிச்சயம் சகாயம் ஐயா அவர்களின் நேர்மை 1௦௦௦ இளைஞரையாவது கவர்ந்திழுத்திருக்கும் , அதில் 1௦௦ இளைஞராவது அரசாங்க அதிகாரியாகவோ , சமூகத்தை இயக்குபவர்களில் ஒருவராகவோ இருக்கலாம் . அதில் 1௦ பேராவது நேர்மைக்கு இலக்கணமாய் இலஞ்சத்திற்கு எதிராய், சமுக சிந்தனையோடு வாழலாம். அது நீயாகவோ நானாகவோ கூட இருக்கலாம். ஒருவேளை நமக்கும் இதுபோன்ற 1௦௦ பேர் கொண்ட கூட்டம் உருவாகலாம். என்ன கொஞ்சம் காலதாமதம் ஆகலாம் .
நீயும் நானும் மாறத் தயார் எனில் ,
இலஞ்சம் கொடுக்காமலும் , வாங்காமலும் , மக்கள் பணத்தை மக்களுக்காக செலவிட தயார் எனில் இது சாத்தியமே !
“ நீ விரும்பும் மாற்றத்தை உன்னில் உருவாக்கு !
பின் உலகமும் நீ விரும்பியபடி மாறும் கூடிய விரைவில் “
எனும் நம்பிக்கையோடு ,
இர . ஏஞ்சலின் ரெனிட்டா

No comments:
Post a Comment