Wednesday, 17 May 2017

தாகம் தீராதா ?

தாகத்தோடு எழுத முயன்று என் தாகத்தை கண்ணீர் கொண்டு தீர்க்க விளைந்ததன் வருத்தம் …………………….
மூன்று போகம் விளைவித்து ஊர் வாழ கலப்பை ஏந்திய கைகள்!     நிவாரண நிதி வாங்க கைகள் ஏந்த தொடங்கியுள்ளன……
வந்தாரை வரவேற்று விருந்தளித்து உபசரித்த தமிழினம் அண்டை மாநிலத்தவரிடம்  நீருக்காக மல்லுக்கட்ட தொடங்கி உள்ளது….
குழாயடிச் சண்டைகளும் , பிள்ளைப்பேரை எதிர்பார்க்கும் கர்ப்பிணி போல தண்ணீர் லாரியின் வரவை எதிர்பார்க்கும் நகர ( நரக ) வாழ்க்கையும்  விதியாக மாறியுள்ளது
ஊற்று நீரில் விவசாயம் செய்து வளம் கொழித்த நிலங்கள் 1௦௦௦ அடி போர் போட்டும் தண்ணீர் இல்லா அவலம் தலை காட்டத் தொடங்கி உள்ளது….
குடிக்கும் நீரை கொண்டு வியாபாரம் செய்யும் அளவுக்கு தண்ணீரின் விலை குதிரை கொம்பாக மாறியுள்ளது .. போகும் போக்கைப் பார்த்தால் நீரின் விலை தங்கம் , வெள்ளி விலையை போல் அரசாங்கம்  நிர்ணயிக்க வேண்டி இருக்கும் போல  ..
காசில்லதோருக்கு அது எட்டாக் கனியாயிருக்கும்!
காசிருப்போருக்கு அது பற்றாக்குறையாயிருக்கும்!
இந்த தண்ணீரின் முக்கியத்துவம் உணர்ந்தே கரிகால் சோழன் காவிரிக்காக கல்லணையை கட்டி , கரைகள் வெட்டி , நீர்பாசனத்துக்கான வழியை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே காட்டி சென்றான் . அந்த சோழனின் எழில் மிகுந்த ஊரே எங்கள் ஊர் . அந்த குடகு மலையில் ஊற்றெடுக்கும் அழகு மங்கை ,தமிழ் மண்ணில் மருமகளாக புக்ககம் புகுந்து வழியெங்கும் வளம் ஈன்று செழிக்கச் செய்யும் காவிரி படுகையே எங்களின் அழகிய கிராமம் ….
ஆற்றங்கரையோர பள்ளி ! வீட்டிற்க்கு பின் வயல்வெளி !விடுமுறை நாளின் ஆற்றுக் குளியல் ! ஆற்று மீன் வறுவல் ! தலைவாழை இலை சாப்பாடு என ஒவ்வொரு விடுமுறை நாளும் கொண்டாட்டம் தான் ! மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்க போகிறார்கள் எனும் செய்தி சொன்னதுமே பக்கத்து வீட்டு அக்கா,  எதிர் வீட்டு அண்ணா, சித்தப்பா பசங்க , பெரியப்பா பசங்க என்று ஒரு கூட்டமே ஆற்றங்கரையில் கூடிவிடும் ! தண்ணீர் பக்கத்து ஊருக்கு வந்துடுச்சு , தண்ணீர் இன்னும் 5 நிமிஷத்துல வரும்… 1௦ நிமிசத்துல வரும் என தொடர் அறிவுப்புகள் வந்துகொண்டே இருக்கும். அந்த நீரை கண்ட மாத்திரத்தில் எத்தனையோ கனவுகள் , எத்தனையோ எதிப்பார்ப்புகள் ! தண்ணீர் வந்த சில நாள்களில் எல்லோரும் அக்கரையில் உள்ள வயல்களுக்கு ஆற்றை கடந்து மாட்டை ஓட்டி சென்று வயலை உழ ஆரம்பித்து விடுவர் . அவர்கள், அவர்கள் வேலையை செய்ய… நாங்களோ ! மீன் பிடிக்க தூண்டில் செய்வதும் , பொறி வாங்குவதும் , கால்வாயில் பதுங்கும் நண்டுகளை பிடிப்பதும் , வாய்காலில் ஓடும் பாம்புகளை வேடிக்கை பார்ப்பதுமாக திரிவோம்.
தாத்தாவிடம் கெஞ்சி அக்கரைக்கு அழைத்து போக சொல்லி , சைக்கிளில் முன்னாடி அமர்ந்து கொண்டு தாத்தா அது வாங்கி தா! இது வாங்கி தா! எனப் பட்டியல் போடும் போது “ தண்ணி வந்துடுச்சுல்ல ! இன்னும் கொஞ்ச நாள்.. விளைச்சல பாத்ததும் எல்லாம் வாங்கி தரேன் “ என்பார் தாத்தா பாசம் பொங்க..
வயலில் கிடைத்த வருமானம் மட்டுமே கொண்டு தன் மூன்று மகனை கரைசேர்த்த அந்த தத்தா “ இந்த வருடம் தண்ணி வராது போலடா ! நெல்ல விதச்சுட்டேன். தண்ணி பாச்சனும் 1௦௦௦ ருபா இருந்தா தாடா “ என என் அப்பாவிடம் கேட்ட போது அந்த முதியவரின் கண்கள் ஈரத்தை மறைத்து கொள்ள முயன்றன …..
அதே ஊரின் இன்றைய நிலைமை இது தான் !
ஆற்றில் மணல் மட்டும் தான் மிஞ்சியுள்ளது . அந்த மணலையும் சுரண்டி எடுக்கப்பட்டு கட்டிடமாக்க ஒப்பந்தம் போடப்பட்டு வருகிறது .மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் வருவது கொஞ்சம் கொஞ்சமாக காணமல் பொய் கொண்டிருக்கிறது. கோவில் குளங்கள் , வாய்க்கால்கள் எல்லாம் தூர்வாரப் படாததால் குப்பை கூளங்களாக மாறிவிட்டன. வீட்டுக்கு பின்னால் உள்ள வயல்களுக்கு எல்லாம் விலை நிர்ணயம் செய்தாயிற்று.   இன்றைக்கு பெரும்பாலோனோர் உழவை விட்டுவிட்டனர் ( விற்றுவிட்டனர் ). இப்பொழுதே மதகு , கண்மாய் என்ன என்று கேட்கும் தலைமுறை இருக்க , நாளை ஆறு , ஏரி , குளங்களை வரைபடங்களிலும் , திரை மானிகளிலும் படமிட்டு காட்டவேண்டிய நிலை நிச்சயம் வரும் …வரலாறில் மறைந்து போன சரசுவதி நதியை போல , மற்றவைகளும் மறைந்து போகலாம் நீர்பாசனங்களை இப்பொழுதும் மீட்டு எடுக்காமல் இருப்போமாயின் ………
நீர்நிலைகளின் இன்றியமையை உணர்ந்தே கங்கையை சிவனிமிடமிருந்தும் , நதிகளை பெண்களாக போற்றியும் , குளங்களை கோவிலுக்குள் வெட்டியும் அதன் புனிதத் தன்மை போற்றினர் நம் முன்னோர் . ஆனால் அதனை நாம் தொழிற்ச்சாலை கழிவுகளுக்கும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் , சாயப் பட்டறைகளுக்கும் கூறு போட்டு விற்றுக்கொண்டிருக்கிறோம் . எஞ்சியுள்ள நீர்பாசனங்களையும் , நன்னீரையும் இழந்து சென்னையைப் போலவே சிறு இயற்கை பேரிடரையும் சந்திக்கும் திறனிழக்க துணிந்து விட்டோமா என்ன ?
ஏனெனில் கிரிக்கெட்டின் சர்வதேச கோப்பைகளை விடவும் , சினிமா நடிகர்களுக்கு பாலபிஷேகம் செய்வதை விடவும் , முகநூலில் லைக் வாங்குவதை விடவும் இது முக்கியமல்லவா ?
காரணம் நம்மால் தாகத்திற்கு தண்ணீரை மட்டுமே குடிக்க முடியும் ….

No comments:

Post a Comment

மதங்களைத் தாண்டி, மொழிகளைத் தாண்டி ஒலித்தது அந்த ஓலக்குரல் !

இன்றும் மறக்க இயலவில்லை ! அந்த கோர அலைகளின் கொடூரத்தை! இதோ சரசரவென்று பதினான்கு வருடங்கள் ஓடிவிட்டன. ஆனாலும் அந்த அலைகள் ஏற்படுத்திய வ...